சத்தியம் வெல்லும்
இறைவன் நாடியதை தவிர வேறு ஒன்றும் எங்களை அணுகாது
Sunday, September 16, 2012
பாப்ரி மஸ்ஜித் இடிப்பிற்கு பிறகு முஸ்லிம் வேட்டை அதிகரித்துவிட்டது – அருந்ததி ராய்!
16 Sep 2012
புதுடெல்லி:பாப்ரி மஸ்ஜித் இடிப்பிற்கு பிறகு முஸ்லிம் இளைஞர்களை பொய் வழக்குகளில் கைது செய்வது பெருமளவில் அதிகரித்துவிட்டது என்று பிரபல எழுத்தாளரும், சமூக ஆர்வலருமான அருந்ததிராய் கூறியுள்ளார். இந்தியாவின் பல்வேறு சிறைகளில் சட்டவிரோதமாக சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் கைதிகளை விடுதலைச் செய்யக்கோரி பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா கடந்த ஆகஸ்ட் 15-ஆம் தேதி முதல் ஒரு மாத கால ‘சட்டப்படி பிணையில் விடு! நிரபராதிகளை விடுதலைச் செய்!’ என்ற தேசிய அளவிலான பிரச்சாரத்தை நடத்தி வந்தது. அப்பிரச்சாரத்தின் இறுதி நிகழ்ச்சியாக டெல்லி ஜந்தர் மந்தரில் நேற்று(செப்.15) நடத்திய மாபெரும் மனிதச் சங்கிலிப் போராட்டத்தில் அருந்ததி ராய் கலந்துகொண்டு உரை நிகழ்த்தினார்.
அருந்ததி ராய் தனது உரையில் கூறியது: “அடக்குமுறைகளுக்கும், கறுப்புச் சட்டங்களுக்கும் எதிராக முஸ்லிம்களும், புரட்சியாளர்களும் ஒன்றிணைவதில் எனக்கு மகிழ்ச்சி ஏற்பட்டுள்ளது. உணவும், உடையும் இல்லாத ஆயிரக்கணக்கான அப்பாவி பழங்குடியின மக்கள் இந்தியாவின் பல மாநிலங்களில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். பாப்ரி மஸ்ஜித் இடிப்பிற்கு பிறகு முஸ்லிம் இளைஞர்களை கைது செய்வது பெருமளவில் அதிகரித்துவிட்டது. அனைத்து அரசியல் கைதிகளையும் உடனடியாக ஜாமீனில் விடுவிக்க நான் கோரிக்கை விடுக்கிறேன்.” இவ்வாறு அருந்ததி ராய் தனது உரையில் குறிப்பிட்டார்.
கைதிகளை விடுவிக்கக்கோரும் கையெழுத்து சேகரிப்பு பிரச்சாரத்தை அருந்ததிராய் துவக்கி வைத்தார். ஆயிரக்கணக்கான மக்கள் மனிதசங்கிலிப் போராட்டத்தில் பிரபல மனித உரிமை-சிவில் உரிமை ஆர்வலர்களும், சமுதாய தலைவர்களும் பங்கேற்றனர். இதன் மூலம் ஜந்தர்-மந்தர் மாறுபட்ட உரிமைப் போராட்டத்திற்கு சாட்சியம் வகித்தது. ‘சட்டப்படி பிணையில் விடு! நிரபராதிகளை விடுதலைச் செய்!’ என்ற அட்டைகளை போராட்டத்தில் கலந்துகொண்ட மக்கள் கையில் பிடித்திருந்தனர். பாப்புலர் ஃப்ர்ண்ட் ஆஃப் இந்தியாவின் தேசிய தலைவர் இ.அப்துற் றஹ்மான் தலைமையில் அனைவரும் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.
இஸ்ரேல் தூதரக கார் குண்டுவெடிப்பு வழக்கில் அநியாயமாக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் மூத்த பத்திரிகையாளர் செய்யத் முஹம்மது அஹ்மத் காஸ்மியின் மகன் ஷோஹைன் காஸ்மி, புனே எரவாடா சிறையில் கொலைச் செய்யப்பட்ட கத்தீல் சித்தீகியின் சகோதரர் ஷக்கீல் சித்தீகி ஆகியோர் மனித சங்கிலிப் போராட்டத்தில் கலந்துகொண்டனர்.
பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் தேசிய தலைவர் இ.எம்.அப்துற்றஹ்மான் தனது உரையில் கூறியது: “3 லட்சத்திற்கும் அதிகமானோர் கறுப்புச் சட்டங்களில் கைது செய்யப்பட்டு விசாரணையை எதிர்பார்த்து இந்தியச் சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்தியாவில் சிறைகள் நிரபராதிகளால் நிரம்பி வழிகின்றன. இவர்களில் பெரும்பாலோர் ஒடுக்கப்பட்ட பழங்குடியினர், தலித்துகள் மற்றும் முஸ்லிம்கள் ஆவர். வாழ்வதற்காக போராடும் முஸ்லிம்களை தீவிரவாதிகளாகவும், பழங்குடியின-தலித் மக்களை மாவோயிஸ்டுகளாகவும் சித்தரிக்கின்றார்கள். சிறைகளில் மட்டுமே ஒடுக்கப்பட்ட மக்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளது. மக்கள் தொகையில் 13.4 சதவீத எண்ணிக்கையைக் கொண்ட முஸ்லிம்கள் சிறைகளில் 23.4 சதவீதம் உள்ளனர். UAPA, AFPSA போன்ற சட்டங்கள் ஜனநாயகத்தில் சேதத்தை ஏற்படுத்தும் புழுக்களாகும். பல வருடங்களாக சிறையில் அடைக்கப்பட்டு பின்னர் நிரபராதிகள் என விடுதலைச் செய்யப்படுபவர்களுக்கு உரிய இழப்பீட்டை வழங்க சட்டத்திருத்தம் கொண்டுவரப்பட வேண்டும்.” இவ்வாறு இ.எம்.அப்துற்றஹ்மான் கூறினார்.
செய்யத் அஹ்மத் காஸ்மியைப் போன்ற உயர் கல்வியைக் கற்ற முஸ்லிம் இளைஞர்களை அரசு கொடுமைப்படுத்துவது அதிகரித்து வருகிறது. இதனை சட்டரீதியாகவும், போராட்டங்களின் மூலமாகவும் எதிர்கொள்ள வேண்டும் என்று பேராசிரியர் எஸ்.ஏ.ஆர் கிலானி தனது உரையில் குறிப்பிட்டார்.
பழங்குடியின- தலித் மக்களை ஒடுக்குவதற்காக அவர்களில் உயர்கல்வி கற்ற இளைஞர்களை அரசு குறிவைப்பதாக டெல்லி பல்கலைக் கழக பேராசிரியர் ஜி.என்.சாய்பாபா தனது உரையில் சுட்டிக்காட்டினார்.
சட்டவிரோதமாக சிறையில் அடைக்கப்பட்டுள்ளவர்களை விடுவிக்க மாறுபட்ட அரசியல் தளங்களில் செயலாற்றும் அனைவரும் ஒன்றிணைந்து குரல் கொடுக்கவேண்டும் என்று என்.சி.ஹெச்.ஆர்.ஓ மனித உரிமை அமைப்பின் தேசிய பொதுச்செயலாளர் பேராசிரியர் பி.கோயா தனது உரையில் கோரிக்கை விடுத்தார்.
இப்போராட்டத்தில் ரோணா வில்ஸன், டாக்டர் பஷீர்(இந்திய யூனியன் முஸ்லிம் லீக்), மவ்லானா ஷாஹுல் பாகவி(இமாம்ஸ் கவுன்சில்), ஹாஃபிஸ் மன்சூர் அலிகான்(எஸ்.டி.பி.ஐ), ஸஃபருல் இஸ்லாம் கான்(மஜ்லிஸே முஷாவரா), கவிதா கிருஷ்ணன்(சி.பி.ஐ.(எம்.எல் லிபரேசன்)), மவ்லானா கலீமுல்லாஹ், அனீஸுஸ்ஸமான்(கேம்பஸ் ஃப்ரண்ட்), உமர் காலித்(டி.எஸ்.யு) ஆகியோர் கலந்துகொண்டு உரை நிகழ்த்தினர்.
Subscribe to:
Posts (Atom)