Tuesday, December 28, 2010

இஸ்ரேல் -அமெரிக்கா - அரபு நாடுகள் ! முக்கோண நட்பும் முஸ்லிம் உம்மத்தும்.


சட்டவிரோத இஸ்ரேல் மீண்டும் ஒரு தடவை தனது காட்டுமிராண்டித்தனத்தை கட்டவிழ்த்து விட்டிருக்கிறது.

பலஸ்தீன் மக்களின் தாயக பூமியை அபகரித்து, இரத்த தாகம் கொண்ட இஸ்ரேல் என்ற நாட்டை மத்திய கிழக்கில் திணித்ததன் மூலம், இஸ்லாத்தின் தாயக பூமியான மத்திய கிழக்கை மேற்குலக நாடுகள் தமது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்தன.

கடந்த 62 வருடங்களாக பல லட்சம் பலஸ்தீனா்களை அது கொன்று குவித்திருக்கிறது .  அப்பாவிப் பொது மக்கள், பெண்கள், குழந்தைகள் என  பாகுபாடு பார்க்காது கொன்றுக் குவிப்பதில் இஸ்ரேலுக்கு நிகராக இவ்வுலகில் எந்நாடும் கிடையாது.

கடந்த மூன்று வருடங்களாக காஸா மக்கள் மீது அது விதித்திருக்கும் பொருளாதார தடையினால் பலஸ்தீன் மக்கள் சொல்லணா துன்பங்களை அனுபவித்து வருகின்றனர்.



காஸா இன்று உலகத் தொடர்புகள், உதவிகள் ஏதுமற்ற நிலையில் தனிமைப் படுத்தப்பட்டிருக்கின்றது.

உணவு, மருந்து போன்ற அத்தியாவசிய பொருட்கள், தண்ணீர், மின்சாரம் போன்றஅடிப்படை தேவைகள் அத்தனையும் மறுக்கப்பட்டு அவர்கள் இன்று வாழ்வோடும், சாவோடும் போராடிக்கொண்டிருக்கின்றார்கள்.

எந்த நாட்டின் உதவிகளோ, ஒத்தாசைகளோ காஸாவிற்குள் நுழையாமல் இஸ்ரேலிய கொடுங்கோலர்களினால் தடுக்கப்பட்டிருக்கிறது.

சுருக்கமாக சொல்வதென்றால் ஒரு திறந்த வெளி சிறையில் சர்வதேச சட்டங்கள் (?) அனைத்தையும் கேள்விக் குறியாக்கி விட்டு காஸா மக்கள் சித்திரவதை செய்யப்பட்டுக்கொண்டிருக்கின்றார்கள்.


இஸ்ரேலின் இந்த மிருகத்தனமான அடக்குமுறையை தகர்க்க எழுந்து வந்த போராட்டமே, இந்த துருக்கியின் FREEDOM FLOTILLA மனித நேய நடவடிக்கை.

பக்கத்தில் இருக்கும் அரபு நாடுகள் ஆழ்ந்த உறக்கத்தில் இருக்கும் போது, துருக்கியிலிருந்து இந்தப் போராட்டப் பயணம் ஆரம்பமானது. காஸா மக்களுக்கான உணவு, மருந்துப் பொருட்களை சுமந்து வந்த கப்பல்களைத்தாக்கி அதில் பயணம் செய்த 42 நாடுகளின் 700 மனித நேய நடவடிக்கையாளர்களைில் 20 பேரைக் கொன்றிருக்கிறது இஸ்ரேலிய இராணுவம்.


இந்தச் சம்பவம் இஸரேலைப் பொறுத்த வரை,  இரத்தகறைப்படிந்த அதன் காட்டுமிராண்டித்தனமான  வரலாற்றில்  மற்றுமொரு பக்கம் மாத்திரமே!.
பறிக்கப்பட்ட பலஸ்தீன் வரலாற்றில் இஸ்ரேலின் மிலேச்சத்தனங்களை  என்ன எண்ணிக்கையில் அடக்கத்தான் முடியுமா?

இத்தகைய மனிதாபினத்திற்கு எதிரான இஸ்ரேலின் மிலேச்சத்தனத்தின் கொடுமையை விட கொடிய மோசமான ஒன்றை, மறைக்கப்பட்ட ஒன்றை  நாங்கள் மறந்து போயிருக்கின்றோம்.

அதுதான் பலஸ்தீனர்களுக்கு எதிரான இந்தக் கொடுமையை அங்கிகரித்து மௌனிகளாக இருக்கும் மத்திய கிழக்கின் அரபு ஆட்சியாளர்களின்  அமெரிக்க நலன் சார்ந்த சுயநல அரசியல்.

அந்த அரசியல்தான் பலஸ்தீனை,  முதல் கிப்லாவை சுமந்திருக்கும் அந்த புண்ணிய பூமியை இஸ்ரேலுக்கு தாரை வார்த்துக் கொடுத்திருக்கிறது.

இஸ்லாத்தின் மூன்று முக்கிய கண்ணிய மிக்க தளங்களாக குறிக்கப்படுபவை  பைத்தல் முகத்திஸ்,  கஃபதுல்லாஹ், மதீனா முனவ்வரா என்ற அல்லாஹ்வின் இல்லங்கள்.

இவற்றில் ஒன்றைான பைத்துல் முகத்தஸை இஸ்ரேலுக்கு பறி கொடுத்து விட்டு  மற்றைய இரண்டு முக்கிய மஸ்ஜித்களான மக்காவிலுள்ள கஃபதுல்லாஹ்வையும், மதினாவிலுள்ள மஸ்ஜிதுன் நபவியையும் மட்டும் நிர்வகிக்கும் பாதுகாவலர்களாக தம்மை பிரகடனப்படுத்திக் கொண்டிருக்கும் அரபு ஆட்சியாளர்களின் அமெரிக்க, இஸ்ரேல் நலன் சார்ந்த தந்திர அரசியலை  இதிலிருந்து தெளிவாக புரிய முடிகிறது.

பைத்துல் முகத்தஸை இஸரேலுக்கு விட்டுக்கொடுத்து விட்டு, ஏனைய இரண்டு மஸ்ஜித்களை மட்டும் பாதுகாப்போராய் (காதிமுல் ஹரமைன்) தம்மை பிரகடனப்படுத்திக்கொண்டிருப்பது அமெரிக்காவுடனான நட்பை பாதுகாக்கும் அரசியல் தந்திரோபாயமாகும்.

இந்த அரபு ஆட்சியாளர்கள்,  நபி(ஸல்) அவர்கள் மூன்று பள்ளிவாசல்களை முக்கிய பள்ளிவாசல்களாக குறிப்பிடும் போது ஒன்றை மட்டும் ஏன் மூடி மறைக்க வேண்டும்.  பைத்துல் மகத்திஸை பாதுகாக்கும் பொறுப்பை அவர்கள் ஏன் நிராகரிக்க வேண்டும்?

இதுதான் மத்திய கிழக்கின்  மன்னாதி மன்னர்களின் அரசியல் மந்திரம்.

பைத்துல் மகத்திஸின் பாதுகாவலர்களாக இவர்கள் தம்மை பிரகடப்படுத்திக் கொண்டால் அதனைப் பாதுகாக்கும் பொறுப்பு இவர்களுக்கு கடமையாகிறது.

அந்தக் கடமையை எவ்வாறு நிறைவேற்றுவது? பைத்துல் முகத்தஸை எப்படி பாதுகாப்பது?  அதனை பாதுகாப்பதற்கு முதலில் இஸ்ரேலின் ஆக்கிரமிப்புக்கு எதிராக போராட வேண்டுமே.

அதுவும் இஸ்ரேலோடு எப்படி போராடுவது?
இஸ்ரேல் அமெரிக்காவின் செல்லப் பிள்ளையல்லவா?   அந்த செல்லப்பிள்ளையை சீண்டிப்பார்க்க அமெரிக்கா விடுமா?

இஸ்ரேலோடு போராடப் போனால் அமெரிக்காவை பகைத்துக் கொள்ள வேண்டிவரும்.   அமெரிக்கா என்ற ஒட்சிசனை உள்வாங்காமல் அரபு ஆட்சியாளர்களால் உயிர் வாழ முடியாது.

எனவே முக்கிய மஸ்ஜித்கள் மூன்றில் இரண்டை தம்வசம் வைத்துக் கொண்டு ஒன்றை இஸ்ரேலுக்கு கொடுத்திருக்கின்றார்கள். இரண்டின் பாதுகாவலர்களாக “இவர்களும்” , மற்றைய ஒன்றின் பாதுகாவலான “அவர்களும்”  இருக்கின்றனர்.

இதுவே இவர்களை இஸ்ரேலின் கொடுமைகளைக் கண்டும் காணாமல் இருக்கச் செய்கிறது. அட்டகாசங்களை அடக்கி வாசிக்கச் செய்கிறது.

இன்று இந்த அரபு ஆட்சியாளர்கள் அல்குர்ஆனின் கட்டளைக்கு நேர் மாறாக தனது பாதுகாவலனாக அமெரிக்காவை ஏற்றுக்கொண்டிருக்கின்றார்கள்.
அமெரிக்காவின் விருப்பத்திற்கு ஏற்றாற்போல் இவர்கள் இஸ்லாத்தை மாற்ற முயற்சி செய்கின்றார்கள்.

இஸரேலும், அரபு நாடுகளும் தமது அரசியல் பாதுகாவலனாக அமெரிக்காவையே ஏற்றுக்கொண்டிருக்கின்றன.  இந்த  ரீதியில் அமெரிக்காவிற்கு இஸ்ரேலும் அரபு நாடுகளும் ஒரே சமம்தான்.
மூவரும் ஒருவருக்கொருவர் உறுதுணையாளர்கள்,நண்பர்கள் தான்.

0 comments:

Post a Comment