கேள்விநேர வேளையில் கேரள மாநிலம் பாலக்காடு எம்.பி எம்.பி.ராஜேஷ் என்பவர் பாப்புலர் ஃப்ரண்டிற்கெதிரான விமர்சனங்களை முன்வைத்தார்.
பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவைத் தொடர்புபடுத்தி கேரள மாநிலத்தில் பரப்புரைச் செய்யப்பட்டு வரும் பேராசிரியரின் கைவெட்டு சம்பவத்தை மேற்கோள்காட்டி ராஜேஷ் தனது உரையை ஆரம்பித்தார்.
மேலும் அவர், பாப்புலர்ஃப்ரண்டின் அலுவலகத்திலிருந்து கைப்பற்றிய சி.டிக்கள் மற்றும் புத்தகங்களில் தேசவிரோத கருத்துகள் அடங்கியிருந்ததாகவும், சி.டியில் ஆப்கானிஸ்தானில் தாலிபான் போராளிகள் தலைவெட்டும் காட்சிகள் அடங்கியிருந்ததாகவும், இவ்விஷயங்களெல்லாம் பத்திரிகைகளில் செய்திகளாக வெளிவந்துள்ளதாகவும், பாப்புலர் ஃப்ரண்ட் தாலிபான் மாடல் நீதிமன்றங்களை நடத்தி நீதித்துறைக்கு சவால் விடுவதாகவும், சர்வதேச தீவிரவாதத்துடன் தொடர்புடைய பாப்புலர் ஃப்ரண்டிற்கு பெருமளவில் வெளிநாடுகளிலிருந்து பணம் வருவதாகவும், என்.ஐ.ஏ, சி.பி.ஐ போன்ற தேசிய புலனாய்வு அமைப்புகளால்தான் இதனை விசாரிக்க இயலும் எனவும், துரதிர்ஷ்டவசத்தால் மத்தியில் ஆளும் கூட்டணி ஆட்சியில் அங்கம் வகிக்கும் சில அரசியல் கட்சிகள் இவ்வியக்கத்திற்கு பாதுகாவலர்களாக உள்ளதால் அரசிற்கு அதில் விருப்பமில்லை எனவும் குற்றஞ் சாட்டினார்.
இதனைத் தொடர்ந்து இ.டி.முஹம்மது பஷீர் எம்.பி, பி.டி.தாமஸ், திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி கல்யாண் பானர்ஜி ஆகியோர் எழுந்து நின்று கடும் கண்டனம் தெரிவித்தனர். எந்த கட்சி பாதுகாவலராக செயல்படுகிறது என்பதை வெளிப்படுத்த வேண்டும் என திரிணாமுல் காங்கிரஸின் கல்யாண் பானர்ஜி கோரினார்.
திரிணாமுல் காங்கிரஸ் எம்.பிக்கள் அவை நடுவேச் சென்று அமளியில் ஈடுபட்டனர். இதனால் சபாநாயகர் இருக்கையில் அமர்ந்திருந்த தம்பித்துரை மதியம் 2 மணிவரை அவையை ஒத்திவைத்தார்.
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்
0 comments:
Post a Comment