கெய்ரோ: அதிபர் ஹோஸ்னி முபாரக்குக்கு பெரும் நெருக்கடி உருவாகியுள்ளது.
எகிப்து வரலாற்றிலேயே இல்லாத அளவுக்கு தலைநகர் கெய்ரோவில் பத்து லட்சம்
பேர் திரண்டு அதிபர் மாளிகையை நோக்கி ஊர்வலமாக செல்ல தயாராகி வருவதால்
முபாரக்குக்கு பெரும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
கெய்ரோவின் தஹிரிர்
ஸ்கொயர் பகுதியில் மக்கள் திரண்டு வருகின்றனர். பல்வேறு பகுதிகளிலிருந்து
அணி அணியாக மக்கள் குவிந்து கொண்டிருக்கின்றனர். முபாரக்கே விலகு என்ற
கோரிக்கையுடன் கடந்த 8 நாட்களாக நடந்து வரும் போராட்டத்தின் உச்சகட்டமாக
இந்த மாபெரும் அணிவகுப்புப் போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இதுவரை நடந்த போராட்டத்திற்கு 125 பேர் பலியாகியுள்ளனர்.
இந்த
நிலையில் பத்து லட்சம் பேர் திரண்டு அதிபர் மாளிகை நோக்கி பேரணியாக சென்று
முற்றுகைப் போராட்டத்தில் குதிக்கவுள்ளதால் பதட்டம் பல மடங்கு
அதிகரித்துள்ளது.
கெய்ரோவைப் போல நாட்டின் இன்னொரு பெரிய நகரமான
அலெக்சான்ட்ரியாவிலும் மாபெரும் அணிவகுப்புப் போராட்டத்திற்கு அழைப்பு
விடுக்கப்பட்டுள்ளது. இந்தப் போராட்டங்கள் காரணமாக ரயில் போக்குவரத்து
முற்றிலும் ரத்து செய்யப்பட்டுள்ளது.
கடந்த ஒரு வாரமாக நடந்து வரும்
போராட்டத்தில் பங்கு கொண்டுள்ளோர் பலரும் தெருக்களில் தூங்கியும்,
சாலையோரங்களில் தங்கியும் போராடி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
தாக்குதல்
நடத்த மாட்டோம்-ராணுவம்
மிகப் பெரிய போராட்டமாக இது
வெடித்துள்ளதைத் தொடர்ந்து ராணுவத்தைக் கொண்டு போராட்டக்காரர்களை முபாரக்
ஒடுக்கலாம் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் போராட்டம் நடத்துவோர் மீது
தாக்குதல் நடத்த மாட்டோம் என்று ராணுவம் அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக
ராணுவம் வெளியிட்டுள்ள அறிக்கையில், அமைதியான முறையில் கருத்து்க்களை
வெளிப்படுத்தும் போராட்டங்களை ஆயுத பலத்தால் ஒடுக்க முடியாது. அது
ராணுவத்தின் வேலையும் அல்ல. அனைவரின் உரிமைகளையும் ராணுவம் மதிக்கிறது.
அமைதியான
முறையில் நடைபெறும் போராட்டங்களை நாங்கள் படை பலத்தைக் கொண்டு ஒடுக்க
முனைய மாட்டோம்.
அதேசமயம் போராட்டத்தில் ஈடுபடுவோர் வன்முறையில்
ஈடுபடக் கூடாது. பொருட்களை சூறையாடுதல், பொதுச் சொத்துக்களுக்கு சேதத்தை
ஏற்படுத்துதலில் ஈடுபடக் கூடாது. யாரையும் அச்சுறுத்தும் வகையில் செயல்படக்
கூடாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் மக்கள் போராட்டத்தில்
ராணுவமும் மறைமுகமாக இணைந்துள்ளதாக கருதப்படுகிறது.
கெய்ரோ
போராட்டம் குறித்து அல்ஜசீரா தொலைக்காட்சி செய்தியாளர் கூறுகையில், இதுவரை
இல்லாத அளவுக்கு மக்கள் திரண்டு வருகின்றனர். கடந்த சில நாட்களாக நடந்து
வரும் போராட்டத்திற்கு வந்ததை விட மிகப் பெரிய அளவில் மக்கள் கூடியுள்ளனர்.
தொடர்ந்து அலை அலையாக மக்கள் வந்து கொண்டுள்ளனர். பெரும் வன்முறை
வெடிக்கும் என்று ஒரு பக்கம் தகவல் பரவி வரும் நிலையில், அதைப்
பொருட்படுத்தாமல் மக்கள் குவிந்து வருகின்றனர் என்றார்.
இன்டர்நெட்டுக்கு
தடை
எகிப்து முழுவதும் இன்டர்நெட் சேவையை அரசு தடை
செய்துள்ளது. இன்டர்நெட் மூலம் தகவல்கள் வேகமாகப் பரவுவதைத் தடுக்கும்
வகையில் இதைச் செய்துள்ளது. தகவல் தொடர்பும் துண்டிக்கப்பட்டுள்ளது. இதனால்
போராட்டக்காரர்களுக்கிடையே தகவல் பரிமாற்றத்தைத் தடுக்க அரசு
முனைந்துள்ளது. ஆனால் அதையும் தாண்டி லட்சக்கணக்கில் மக்கள் கெய்ரோவில்
குவிந்து வருவதால் முபாரக் அரசு பெரும் அதிர்ச்சியில் உள்ளதாக தகவல்கள்
கூறுகின்றன.
ஏழை, பணக்காரர், வயதானவர்ககள், இளைஞர்கள், சிறுவர்கள்,
முஸ்லீம்கள், கிறிஸ்தவர்கள் என பல தரப்பினரும் தஹிரிர் ஸ்கொயரில் கூடி
வருவதாக செய்திகள் கூறுகின்றன. அனைத்துத் தரப்பினரின் ஒட்டு மொத்த
வெறுப்பையும் முபாரக் சம்பாதித்து வைத்திருப்பதை உணர்த்துவதாக இது உள்ளதாக
அல்ஜசீரா கூறுகிறது.
மக்கள் போராட்டம் மிகப் பெரிதாகி வருவதைத்
தொடர்ந்து எகிப்தில் விமான சேவையும் ரத்து செய்யப்பட்டுள்ளது.
போராட்டத்தை
ஒடுக்க கெய்ரோ, அலெக்சான்ட்ரியா, சூயஸ் ஆகிய நகரங்களில் ஊரடங்கு உத்தரவு
பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஆனால் மக்கள் வெள்ளத்திற்கு முன்பு, ஊரடங்கு
உத்தரவு ஒன்றுமில்லாமல் போயுள்ளது.
பேச்சுவார்த்தைக்கு
அழைப்பு
இதற்கிடையே, போராட்டத்தைக் கைவிட்டு விட்டு
பேச்சுவார்த்தைக்கு வருமாறு போராட்டக்காரர்களுக்கு புதிய துணை அதிபராக
நியமிக்கப்பட்டுள்ள உமர் சுலைமான் கோரிக்கை விடுத்துள்ளார். எதிர்க்கட்சித்
தலைவர்களுக்கு இந்த அழைப்பை அவர் விடுத்துள்ளார்.
அனைத்துப்
பிரச்சினைகளுக்கும் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணுமாறு அதிபர் முபாரக்
தன்னைக் கேட்டுக் கொண்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
0 comments:
Post a Comment