Friday, September 23, 2011

முதலாவது சி.ஐ.ஏ. அதிகாரி, ஆசியாவில் கால் வைத்தபோது..





டெஸ்மன்ட் பிட்ஸ்ஜெரால்ட்’ என்ற நபரின் பெயர் சி.ஐ.ஏ.யின் ஆரம்பகால உளவாளிகளுக்கு ஒருவித கலந்து கட்டிய நினைவுகளைக் கொடுக்கும். சி.ஐ.ஏ.யில் டெஸ்மன்ட்டைச் சிலாகிப்பவர்களும் உண்டு. கிண்டலாகச் சிரிப்பவர்களும் உண்டு.
ஆனால் யாரைக் கேட்டாலும், ‘முயற்சியுடைய ஆள்’ என்று சொல்லத் தவற மாட்டார்கள்.
டெஸ்மன்ட்டுக்கு சி.ஐ.ஏ. உயர்மட்டத்தில் செல்வாக்கு இருந்தது உண்மை. அவரது பதவி சி.ஐ.ஏ.யில் உயர்வதற்கு இந்தச் செல்வாக்கும் ஒரு காரணம்.  செல்வாக்கு இருந்த போதிலும் வேறு ஒரு விஷயத்தில் குறை இருந்தது.
அனுபவம்!
அதாவது அவருக்கு, கள அனுபவம் பூச்சியம். சி.ஐ.ஏ.யில் மேல்மட்டத்தில் எவ்வளவு செல்வாக்கு இருந்தாலும், வெளிநாடுகளில் இரண்டொரு ரகசிய ஒப்பரேஷன்களை வெற்றிகரமாக நடத்தினால்தான் ஒரு அளவுக்கு மேல் வளரமுடியும்.  இதனால் டெஸ்மன்ட், தானே களத்தில் குதிக்கத் தீர்மானித்தார்.
அதற்காக அவர் தேர்ந்தெடுத்தது சி.ஐ.ஏ.யின் ஃபார்-ஈஸ்ட்  டிவிஷன். அதாவது ஆசியா!
1954ல் டெஸ்மன்ட் சி.ஐ.ஏ.யின் ஆசிய ஒப்பரேஷனுக்கு தற்காலிகத் தலைவராக நியமிக்கப்பட, நேரடியாகக் கிளம்பிவிட்டார் ஆசியாவுக்கு – கள அனுபவம் பெறுவதற்கு!
டெஸ்மன்ட் முதலில் போய்ச் சேர்ந்த இடம் சைனா.  சி.ஐ.ஏ.க்கு சைனாவில் ஒரு பெரிய ரகசிய ஆபரேஷன் நடைபெற்றுக் கொண்டிருந்தது.  அதைத் தலைமை தாங்கி நடத்துவதற்காக போய்ச் சேர்ந்தார்  டெஸ்மன்ட். சைனா ஆபரேஷனின் முக்கிய நோக்கமே, கம்யூனிஸம் ஆசியாவில் பரவவிடாது தடுப்பது! (ரஷ்யாவிலும் சி.ஐ.ஏ கிட்டத்தட்ட இப்படி ஒரு ஆபரேஷனைச் செய்தது)
சி.ஐ.ஏ. உருவாக்கப்பட்டதே 1947ம் ஆண்டு செப்டெம்பர் மாதம், 18ம் தேதிதான். அதற்குமுன் இயங்கிவந்த அமெரிக்க உளவுப் பிரிவின் பெயர் ஓ.எஸ்.எஸ். (OSS – Office of Strategic Services).
உலகமகா யுத்த காலத்தில் சைனாவில் இயங்கியது ஓ.எஸ்.எஸ்.தான்! யுத்தத்தில் ஷங்காய் வீழ்ச்சியடைந்தபோது, ஓ.எஸ்.எஸ். உளவாளிகள் அத்துடன் அங்கிருந்து கிளம்பி ஜப்பான் சென்று விட்டார்கள் – சைனாவில் இருந்து ரிஸ்க் எடுக்க விரும்பாமல்!
ஜப்பானில், யொகோசுகா என்ற கடற்படைத் தளத்திலிருந்து இயங்கியது ஓ.எஸ்.எஸ்.
அதன்பின் சி.ஐ.ஏ. உருவாக்கப்பட்டபோது, யொகொசுகாவில் இருந்த அதே உளவாளிகளை சி.ஐ.ஏ.யும் வேலைக்கு அமர்த்திக் கொண்டது – அனுபவசாலிகள் என்பதால். இதனால் டெஸ்மன்ட் ஆசியாவுக்குச் சென்றது சைனா ஆபரேஷனைக் கவனித்துக் கொள்ள என்றபோதிலும், அவரது வேலை ஜப்பானிலுள்ள கடற்படைத் தளத்திலிருந்தே நடைபெறத் தொடங்கியது.
இது அவ்வளவு சுலபமாக இருக்கவில்லை. மாவோ கம்யூனிஸ்ட்காரர்கள் ரகசியங்களைக் காப்பாற்றுவதில் மன்னர்களாக இருந்தார்கள்.
சோவியத் ரஷ்யாவிலாவது பரவாயில்லை – ஆட்சியின் அதிருப்தியாளர்களை கையில் போட்டுக் கொண்டு அலுவல் பார்க்கலாம். ஆனால் சைனாவிலோ, ஆட்சியின் அதிருப்தியாளர்களை சீன அரசு முதல் காரியமாக மேலே அனுப்பி விட்டுத்தான் மறு வேலை பார்த்தது.  இதனால் சீனா பற்றிய உளவுத் தகவல்களைத் திரட்ட, சி.ஐ.ஏ. திணற வேண்டியிருந்தது.
டெஸ்மன்ட் போய்ச் சேர்ந்தபோது, சி.ஐ.ஏ.க்கு ஆசியா பெரிதாகப் பரிச்சயமான இடமாக இருக்கவில்லை.  அங்கே அப்போதுதான் புதிதாகத் தவழத் தொடங்கியிருந்தது சி.ஐ.ஏ. இதனால் ஆரம்ப நாட்களில் சி.ஐ.ஏ.க்கு சிலர் காதில் பூச்சுற்றி விட்டதும் நடந்தது.
உதாரணம் ஒன்று, சைகோன் நகரில் இருந்து சி.ஐ.ஏ.க்கு தகவல் கொடுக்கும் ஏஜன்ட் ஒருவர் செய்த காரியம்.
இவரது சங்கேதப் பெயர் LF-BOOKLET.  இவர் தனக்கு சைகோன் நகரில் ரகசிய நெட்வேர்க் ஒன்று இருப்பதாக சி.ஐ.ஏ.யை நம்ப வைத்திருந்தார்.  தன்னிடமுள்ள நெட்வேர்க் மூலமாக, சீனாவின் ரகசிய ரேடியோ தகவல் பரிமாற்றங்களை அறிந்து சொல்வதுதான் இவரது பணி. அதற்கு சி.ஐ.ஏ. ஏராளமாக பணம் கொடுத்துக் கொண்டிருந்தது.
இந்த உளவுவேலை வருடக்கணக்கில் நடைபெற்றது.  யாருக்கும் சந்தேகம் வரவில்லை.
சந்தேகம் எப்போது வரத்தொடங்கியது என்றால், வியட்நாமில் இருந்து சி.ஐ.ஏ., தாமே நேரடியாக ரேடியோ உரையாடல்களை ஒட்டுக் கேட்கும் கருவிகள் சிலவற்றை அமைத்துக் கொண்டது.  அதில் ஒட்டுக் கேட்கும் தகவல்களை மொழி பெயர்த்துப் பார்க்கும்போது LF-BOOKLET கொடுக்கும் உளவுத்தகவல்கள் எதுவுமே வருவதில்லை.

டெஸ்மன்ட் பிட்ஸ்ஜெரால்ட், மனைவியுடன் பார்ட்டி ஒன்றில்..
சந்தேகம் வலுக்கவே, LF-BOOKLETன் நடமாட்டங்களை சி.ஐ.ஏ. கவனிக்கத் தொடங்க, ரகசியம் வெளியாகியது.
விஷயம் என்னவென்றால் சைனாவில் இருந்து சைகோன் வரை சில சீனப் பத்திரிகைகள் (கம்மியூனிஸ்ட் இரும்புத் திரையையும் தாண்டி) திருட்டுத்தனமாகச் வந்து கொண்டிருந்தன.
அவற்றில் வெளியாகும் ராணுவ ரீதியான செய்திகளை மொழிபெயர்த்து, ரகசிய ரேடியோவில் ஒட்டுக் கேட்டதாக, சி.ஐ.ஏ.க்கு  விற்றுக் கொண்டிருந்தார் LF-BOOKLET.
கிட்டத்தட்ட ஒரு மில்லியன் டொலர் பணத்தை (அந்த நாட்களிலேயே) இதில் விட்டிருந்தது சி.ஐ.ஏ.
இப்படியாக,  சி.ஐ.ஏ. ஐப்பானில் இருந்து கொண்டு நடத்திய ‘சைனா மிஷன்’ ஒரே தில்லுமுல்லாக நடந்து கொண்டிருப்பது தெரியாத நிலையில்தான் போய் இறங்கியிருந்தார் டெஸ்மன்ட் – சி.ஐ.ஏ.யின் ஆசிய ஒப்பரேஷனுக்குப் பொறுப்பாளராக. இது நடந்தது 1954ல்.
அப்போது ஜப்பானில் இருந்து இயங்கிக் கொண்டிருந்தவர்கள் அனைவருமே, சி.ஐ.ஏ. தோன்றுவதற்கு முன்பிருந்த ஓ.எஸ்.எஸ். உளவுத்துறையின் ஆட்கள். புதிதாக ஆட்களை வேலைக்கு அமர்த்தி, பயிற்சி கொடுத்து ஆசியா வரை அனுப்பி வைக்காமல், பழைய ஆட்களையே உபயோகித்துக் கொள்ளும் ஏற்பாடு அது.
இந்த உளவாளிகளை ஜப்பான் வரை போய்ப் பார்த்த டெஸ்மன்ட் திகைத்துப் போனார்.
எல்லோரும் ஏதோ கௌ-பாய் படத்தில் நடிக்கும் ஆட்கள் போல இருந்தார்களே தவிர, யாரைப் பார்த்தாலும் உளவாளிகள் போல தெரியவில்லை.
அதைவிடப் பெரிய விஷயம் ஜப்பானில் சைனா மிஷன் ஒப்பரேஷனைக் கவனித்துக் கொண்டிருந்த யாருமே, பள்ளி மேற்படிப்பைத் தாண்டாத ஆட்களாக இருந்தார்கள். (1950களில் ஆசியா வரை சென்று வேலை செய்ய அமெரிக்காவில் பெரிதாக யாரும் முன்வராத காரணத்தால் இந்த நிலை!)
ஜப்பானில் போய் இறங்கிய உடனேயே டெஸ்மன்ட்டுக்காக ஒதுக்கப்பட்ட வீட்டுக்கு அவரை அழைத்துச் சென்றபோது, அதைப் பார்த்து அவர் மிரண்டு போனார்.
அது வீடு அல்ல, மாளிகை!
ஜப்பானிய முன்னாள் இளவரசர் ஒருவருக்காக ஜேர்மன் ஆர்சிடெக்ட் ஒருவர் அமைத்துக் கொடுத்திருந்த டுடொர் பாணி மாளிகை அது. ஒரு சமையல்காரர், ஒரு வேலைக்காரர், ஒரு நர்ஸ், ஒரு டிரைவர், ஒரு தோட்டக்காரர் என்று ஏகப்பட்ட ஆட்களை வேலைக்கு அமர்த்திருந்தது லோக்கல் சி.ஐ.ஏ.
சி.ஐ.ஏ.யில் வேலை பார்த்த உளவாளிகள் அனைவரும், இப்படியான வீடுகளில்தான் வசித்தார்கள். அத்துடன் அவர்கள் சி.ஐ.ஏ.யின் உளவாளிகள் என்பதை, ஏதோ கல்லூரியின் பேராசிரியர் என்பதுபோல பக்கத்து வீட்டுக்காரர்கள் முதல், மளிகைக் கடைக்காரர் வரை எல்லோருக்கும் சொல்லி வைத்துவிட்டு, அட்டகாசமாக வாழ்ந்து கொண்டிருந்தார்கள்.
“அவர்களது வீட்டு வாயிலில் ஒரு பெயர் பலகை வைத்து, அதில், ‘டொம் ஜோன்ஸ், உளவாளி – சி.ஐ.ஏ.’ என்று எழுதப்பட்டிருக்கவில்லையே தவிர, அவர்கள் யாரென்பது ஜப்பானிலுள்ள ஒரு சிறிய நாய்க்குட்டிக்குக்கூடத் தெரிந்திருக்கிறது. இவர்களால் எப்படி உளவுத் தகவல்களைச் சேகரிக்க முடியும்?” என்ற கேள்வியுடன் தனது முதலாவது அறிக்கையை சி.ஐ.ஏ.யின் தலைமையகத்துக்கு அனுப்பி வைத்தார் டெஸ்மன்ட்.
சைனா மிஷன் ஏன் தள்ளாடுகின்றது என்பது அவருக்கு அப்போதுதான் புரிந்தது. அங்கிருந்து ரகசியமாக இயங்குவது நடக்கவே நடக்காது என்பதும் புரிந்தது.
இதையடுத்து டெஸ்மன்ட் ஒரு உல்லாசப் பயணி போல புறப்பட்டார். வெவ்வேறு ஆசிய நகரங்களுக்குப் போனார் – சி.ஐ.ஏ. ரகசியமாக இருந்து இயங்குவதற்கு ஒரு சரியான இடத்தைத் தேடுவதற்காக.
அந்த நாட்களிலேயே பிலிப்பீன்சில் சி.ஐ.ஏ.க்கு சில முகாம்கள் இருந்தன. சுபிக் பே என்ற இடத்திலிருந்த அமெரிக்க ராணுவ முகாம்தான் சரியான இடமாகப் பட்டது அவருக்கு.
முகாமுக்குள் அடுத்தடுத்து வரிசை வரிசையாக நூற்றுக்கணக்கான வீடுகள், ராணுவத்தினர் தங்குவதற்காக. ஜப்பானில் சி.ஐ.ஏ.யின் ஆட்கள் இருந்ததுபோல மாளிகைகள் அல்ல!  இந்த வீடுகளில் இருப்பவர்கள் அனைவரும் அமெரிக்கர்கள் என்பதால் இதற்குள் கலந்து தங்கிவிட்டால், யார் ராணுவத்தினர், யார் சி.ஐ.ஏ.யின் உளவாளிகள் என்று யாராலும் கண்டுபிடிக்கவே முடியாது.
தான் நினைத்ததைச் செயற்படுத்த சி.ஐ.ஏ. தலைமையகத்திடம் அனுமதி கேட்டார் டெஸ்மன்ட். அனுமதி கிடைத்தது.
ஜப்பானின் யொகோசூகா நகரில் அமைந்திருந்த சி.ஐ.ஏ.யின் தளம் முழுமையாக மூடப்பட்டது. பழைய பெருச்சாளிகளான ஓ.எஸ்.எஸ். முன்னாள் உளவாளிகள் பலர் அமெரிக்காவுக்கு அனுப்பி வைக்கப்பட்டார்கள். பிலிப்பீன்சில் இருந்து இயங்குவதற்காக புதிய உளவாளிகள் – இதில் பெரும்பாலானவர்கள் இளைஞர்களும் இளம் பெண்களும் – சி.ஐ.ஏ.யின் அமெரிக்க, மற்றும் ஐரோப்பியத் தளங்களில் இருந்து தருவிக்கப்பட்டார்கள்.
சி.ஐ.ஏ.க்கு முற்றிலும் வித்தியாசமான, புதிய ரகசிய, ஆபரேஷன் ஒன்று, பிலிப்பீன்ஸ் நாட்டின் சுபிக் பே பகுதியில் இருந்து இயங்கத் தொடங்கியது. ஆரம்பத்தில் முழு ஆசியாவுக்கான உளவு ஆபரேஷனும் இங்கிருந்துதான் நடைபெற்றது.
இருந்தும், சி.ஐ.ஏ. திட்டமிட்டிருந்த ‘சைனா மிஷன்’ அப்போதும் சரியாக இல்லை.
காரணம் சி.ஐ.ஏ. உளவாளிகள், சீனாவுக்குள் இருந்து இயங்காமல், வெளியே இருந்தபடி உளவு சேகரிப்பது அவ்வளவு சுலபமாக இல்லை. ஆனால், சீனாவுக்குள் அமெரிக்க உளவாளிகள் எந்த ரூபத்தில் உள்ளே நுழைந்தாலும் கொல்லப்படுவார்கள்.
இதற்கு என்ன செய்யலாம் என்று யோசித்த டெஸ்மென்ட், பிலிப்பீன்சில் இருந்து தாய்வானுக்குச் சென்றார். அங்கே ஏற்கனவே சி.ஐ.ஏ.க்கு சிறியதாக ஒரு ஆபரேஷன் இருந்தது.  இவர்களால் தாய்வானில் வைத்து, சில சீனப் பிரஜைகளை தமது உளவாளிகளாக்க முடிந்தது.
உளவு பார்க்க ஒப்புக் கொண்ட சீனர்களுக்கு பெருமளவு பணம் உடனடியாகவே கொடுக்கப்பட்டது. அத்துடன் அவர்களை தாய்வானில் இருந்து சீனாவின் எல்லைகளுக்குள் கொண்டுபோய் விடும் பொறுப்பையும் சி.ஐ.ஏ. ஏற்றுக் கொண்டது.
இதற்காக சி.ஐ.ஏ. நாடியது, சீன ஆட்கடத்தல் குழு ஒன்றை!
சீன கடத்தல் குழுவிடம், டெஸ்மென்ட்டும் மற்றய சி.ஐ.ஏ. உளவாளிகளும், தங்களையும் கடத்தல்காரர்களாக அறிமுகப் படுத்திக் கொண்டார்கள் . ஆசியாவிலிருந்து விலை மதிப்பற்ற சிலைகளைக் கடத்திச் சென்று மேலைநாடுகளில் விற்பதுதான் தாங்கள் செய்யும் கடத்தல் என்று சொல்லிக் கொண்டார்கள்.
சிலைகளை சீனாவுக்குள் சென்று எடுத்துவர,  சீன அரசுக்குத் தெரியாமல் சீன எல்லைக்குள் ஆட்களைக் கடத்தச் செல்லப் பேரம் பேசினார்கள்.
சீனாவுக்கு வெளியேயிருந்து ஒரு நபரை சீனாவுக்குள் கொண்டுபோய் விடுவதற்கு 10 ஆயிரம் டாலர் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டது. (1950களில் இது ஒரு மிகப் பெரிய தொகை)
தாய்வானின் எல்லைப்புற சிறு நகரம் ஒன்றில் இதற்காக ஒரு வீடு செட்டப் செய்யப்பட்டது. அந்த வீட்டில் வைத்துத்தான் கடத்திச் செல்லப்பட வேண்டிய நபரையும், கடத்திச் செல்வதற்கான கூலியையும் சி.ஐ.ஏ. கொடுப்பது வழக்கம்.
இதில் ஓர் வேடிக்கை என்னவென்றால், சீனாவில் இருந்து வெளியேறவே, மற்றையவர்கள் கடத்தல்காரர்களிடம் பணம் கொடுத்துக் கொண்டிருந்தார்கள். ஆனால்  இவர்களோ,  சீனாவுக்கு உள்ளே ஆட்களைக் கொண்டுபோய் சேர்க்க ரேட் பேசினார்கள்!
சீனாவில் இருந்து ஒரு நபரை சீனாவுக்கு வெளியே கடத்திச் செல்வதற்கே அந்த நாட்களில் 2 ஆயிரம் டாலர் கட்டணம்தான் கடத்தல்காரர்களால் வசூலிக்கப்பட்டு வந்தது. சீனாவுக்குள் இருந்து ஆட்களை வெளியே கொண்டு போவதுதான் கடினமான காரியம்.
அதற்கே கட்டணம் 2 ஆயிரம் டொலர்தான் என்னும்போது, சைனாவுக்கு உள்ளே ஒரு நபரைக் கொண்டு செல்ல அதில் பாதியளவு பணம் கொடுத்தாலே காரியத்தை முடித்திருக்கலாம்.
ஆனால், சி.ஐ.ஏ. இந்த கடத்தலுக்காக விலைவாசி தெரியாமல்  அதிக பணம் கொடுத்துக் கொண்டிருந்தார்கள்.
பணம் அதிகம் கொடுத்தாலும் காரியம் என்னவோ கச்சிதமாகத்தான் முடிந்தது. ஒவ்வொரு மாதமும் குறைந்தபட்சம் சி.ஐ.ஏ.யால் அனுப்பப்பட்ட இரண்டு பேராவது சீனாவுக்குள் போய்ச் சேர்ந்து கொண்டிருந்தார்கள். இவர்களுக்காக கடத்தல் வேலைகளைச் செய்து கொடுத்துக் கொண்டிருந்த சீனக் கடத்தல்காரர்களுக்கு, கடைசி வரை இவர்கள் சி.ஐ.ஏ. உளவாளிகள் என்பது தெரியவரவே இல்லை!
இப்படித்தால் சி.ஐ.ஏ., ஆசியாவில் முதன்முதலாக தமது காலை வெற்றிகரமாக ஊன்றியது!  (இப்போது,   ஆசியா பற்றி, ஆசியர்களுக்கே அவர்கள் பாடம் எடுப்பார்கள்!)

நன்றி :விறுவிறுப்பு டாட் காம் 
-சி.ஐ.ஏ.யின் சில குறிப்புகளுடன், 

2 comments:

  1. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
  2. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete