Wednesday, August 8, 2012

“இப்தார்” - ஒரு பார்வை

ஈராக்கிலும், ஆப்கானிலும், வசிரிஸ்தானிலும் குண்டு வீச உத்தரவிடும் அதே ஒபாமா கொடுக்கும் இப்தார் by: Zuwair Meeran இன்று அந்நிய மதத்தவர்களால் முஸ்லிம்களுக்காக ஏற்பாடு செய்யப்படும் இப்தார் நிகழ்ச்சிகள் பற்றிய செய்திகள் பரவலாக பல்வேறு ஊடகங்களிலும் வெளிவந்துகொண்டிருக்கின்றன. மாற்று மதத்தவர்கள் நல்ல எண்ணத்துடன் இவற்றை ஏற்பாடு செய்தாலும் கூட, இவை குறித்து இஸ்லாத்தின் நிலப்பாடு என்ன என்பதனை சற்று நோக்குவதே பொருத்தமாகும். இது குறித்து மவ்லவி அஷ்ஷெய்க் அஷ்ரப் அலி (அஸ் சலபி) அவர்களின் உரையொன்றின் பகுதியுடன் மேலும் சிறு விளக்கமொன்றை நோக்குவோம். இது இப்த்ரின் அடிப்படை நோக்கம் குறித்த ஓரளவு தெளிவை தரப் போதுமானதாக இருக்கும், இன்ஷா அல்லாஹ். "அல்லாஹ் சுபானஹுதாலா தனது திருமறையில் ரமலான் பற்றி இரண்டாம் அத்தியாயம் 185ஆம் வசனத்தில் கீழ்க்கண்டவாறு எடுத்துரைக்கிறான் : "ரமலான் மாதம் எத்தகையது என்றால் அதில்தான் மனிதர்களுக்கு வழிகாட்டியாகவும், தெளிவான சான்றுகளைக் கொண்டதாகவும், (நன்மை, தீமைகளை) வேறுபடுத்திக் காட்டக் கூடியதுமான குர்ஆன் அருளப்பட்டது. ஆகவே எவர் அம்மாதத்தை சாட்சி பெற்றுக்கொண்டாரோ அவர் அம்மாதம் நோன்பு நோற்கட்டும் . " பஜ்ர் தொழுகையின் ஆரம்ப நேரம் முதல், சூரியன் மறையும் வரை உள்ள நேரம் நோன்பின் நேரமாகும். நோன்புக் காலங்களில் பின்னிரவில் உண்ணப்படும் உணவு, "ஸஹர் உணவு'. இவ்வுணவை நபி சல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் வலியுறுத்தியுள்ளார்கள். "நீங்கள் ஸஹர் உணவு உண்ணுங்கள். ஏனெனில் ஸஹர் உணவில் பரகத் (அபிவிருத்தி) உள்ளது'' என அறிவுறுத்துகிறார்கள். நோன்பு திறப்பதை, (தாமதிக்காது) அவசரப்படுத்தும் காலம் வரை என் உம்மத்தினர் நன்மையிலேலே இருப்பார்கள். (ஆதாரம்: புகாரி) "நோன்பாளிக்கு இரண்டு மகிழ்ச்சிகள் உள்ளன. ஒன்று நோன்பு துறக்கும்போது ஏற்படும் மகிழ்ச்சியாகும். மற்றொன்று தனது இறைவனைச் சந்திக்கும்போது ஏற்படும் மகிழ்ச்சியாகும்'' போன்ற நபிமொழிகள் நோன்பின் மேன்மையை எடுத்துக் கூறுகின்றன. நோன்பு நோற்பதால் ஏற்படும் பலன் பற்றி இரண்டாம் அத்தியாயம் 183ஆம் வசனத்தில் அல்லாஹ் கூறும்போது , "இறை நம்பிக்கை கொண்டோர்களே! உங்களுக்கு முன் இருந்தவர்கள் மீது நோன்பு கடமை ஆக்கப்பட்டதுபோல் உங்கள் மீதும், அது கடமை ஆக்கப்பட்டுள்ளது. அதன் மூலம் நீங்கள் தூய்மையுடையோர் ஆகலாம்'' எனக் குறிப்பிடுகிறான். இவ்வாறு தெளிவாக சிறப்பித்துக் கூறப்பட்ட, எம்மை தூய்மையாக்க சொல்லப்பட்ட இபாதத் தான் நோன்பாகும். இன்னும் இந்த இபாதத்தில் இப்தார் இன் சிறப்புகள் பற்றியும் அதனுடைய வெகுமதிகள் பற்றி தெளிவாகவும் சிறப்பாகவும் கூறப்பட்ட பின்பும் , இந்த இபாதத்தில் முஸ்லிம் அல்லாதவர்களை , தூய்மை அற்றவர்களை கூட்டு சேர்ப்பது, நபி வழிக்கு முரணான செயலாகும். அதாவது அல்லாஹ்வுக்காக செய்யும் இபாதத்தில் அல்லாஹவை மறுப்பவர்களுக்கு இடமளிப்பதாகும். சமூக நல்லிணக்கம் , மாற்று மதத்தவர்களுக்கு அழைப்புப்பணி என்றெல்லாம் சாக்குபோக்கு சொன்னாலும் இதன் அடிப்படை எம்மதமும் சம்மதம் என்ற குப்ரான கொள்கையின் மறு வடிவம் தான். இன்னும், நபி சள்ளல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் முற்று முழுதாக காபிர்களுடன் வாழ்ந்தவர்கள். அவர்கள் இஸ்லாத்தை எத்தி வைக்கவோ , மாற்று மதத்தவர் மத்தியில் முஸ்லிம்களை பற்றி நல்லெண்ணத்தை ஏற்படுத்தவோ இப்தாரை பயன் படுத்தவில்லை. மாறாக உங்கள் உணவை தக்வா உள்ளவர்களை தவிர உன்ன வேண்டாம் (அபூதாவுத்) என்று வேறு கூறிவிட்டார்கள். யாரேனும் ஒரு காபிர் பசி என்று ஒரு வேளை கேட்டு வந்தால், அண்டை அயலவராக இருந்தால், இதர வேலைகளில் கவனித்தார்களே தவிர மார்க்கத்தின் எந்தவொரு இபாத்திலும் அவர்களை கூட்டு சேர்க்கவோ , அவர்களுடன் ஒன்றர கலக்கவோஇல்லை. இன்னும் எமது அருமை சஹாபாக்களோ , தாபியீன்களோ, இவர்களை பின் தொடர்ந்த சலபுஸ் சாலிஹீன்களோ இந்த வழிமுறையை கையாளவில்லை. எனவே, இந்த தூய்மையான இபாதத்தில் மாற்று மதத்தவர்கள் அழைக்கப்படுவதும் கூடாது, மாற்று மதத்தவர்களின் ஏற்பாட்டில் நடைபெறுவதில் பங்குபெற்றுவதும் கூடாது. அல்லாஹ் தூய்மையானவன். தூய்மையானதைத் தவிர வேறு எதையும் அவன் ஏற்றுக் கொள்ள மாட்டான். அல்லாஹ் மனிதனைப் படைத்து அவன் வாழ்வதற்குத் தேவையான அனைத்து வாய்ப்புகளையும் கொடுத்து உள்ளான். இவ்வாறு அனைத்து வசதி வாய்ப்புகளையும் மனிதனுக்கு ஏற்படுத்திக் கொடுத்திருக்கும் அல்லாஹ் அந்த மனிதனிடம் கூறுவது ஒன்றே ஒன்று தான். ''நீ என்னை மட்டுமே வணங்க வேண்டும் , எனக்கு எதையும் இணையாக்காதே'' என்பது தான் அது!" மேலும், நபி சல்லல்லாஹு அலைஹிவசல்லாம் அவர்கள் இப்தார் என்பது ஒரு இபாதத் என்றார் அடிப்படையில் அதனை ஊக் குவித்து உள்ளார்கள். யாரொருவர், ஒரு நோன்பாளிக்கு நோன்பு திறக்க அகாரம் அளித்து உதவுகின்றாரோ, அவரும் அன்நோன்பாளியின் நன்மையைப் போன்ற நன்மையைப் பெற்றவராவார் என்ற நபி மொழி நாமனைவரும் அறிந்த ஒன்றே. ஒருவரையோ அல்லது பலரையோ நோன்பு திறக்க வைத்து நன்மைகளைப் பெற்றுக் கொள்வதற்கு, பெற்றுக் கொள்பவர் உண்மையான முஸ்லிமாக இருக்க வேண்டும். இப்தார் என்பது ஒரு ஆடம்பரமான, பல்சுவை உணவுகளை புசிக்கும் ஒரு நிகழ்வாக மாற்றப் பட்டுள்ளதன் காரணத்தால், இப்தாரின் மார்க்க ரீதியான முக்கியத்துவம் மற்றும் அடிப்படைகள் மறக்கடிக்கப் பட்டுள்ளன. இப்தாரை வெறுமனே ஒரு நிகழ்வாக கருதாமல், அதனை ஒரு இபாதத்தாக கருதுவோம். இஸ்லாத்தில் இபாதத் என்பது முஸ்லிம்களுக்கு மட்டுமு ரியது என்பதனைப் புரிந்துகொள்வோம். (குறிப்பு : நீல நிறத்தில் காணப்படுவது மவ்லவி அஷ்ஷெய்க் அஷ்ரப் அலி (அஸ் சலபி) அவர்களுடைய விளக்கமாகும்)

0 comments:

Post a Comment