Wednesday, January 12, 2011

ஈரான் தொடர்பில் இலங்கை சொன்னதை அமெரிக்கா நம்பவில்லை; விக்கிலீக்ஸ்!

ஈரானிடமிருந்து ஆயுதங்கள் எதையும் கொள்வனவு செய்ய முற்படவில்லை என இலங்கை அரசாங்கம் தெரிவித்திருந்த போதிலும் அதனை அமெரிக்கா முழுமையாக நம்பவில்லை என விக்கிலீக்ஸ் தெரிவித்துள்ளது.
2009ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 21ஆம் திகதியிடப்பட்டு இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் பற்றீசியா புட்னீஸ் அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்திற்கு அனுப்பிய தகவல் பரிமாற்றக் குறிப்பின் மூலம் தெரிய வந்துள்ளது. இத்தகவல் குறிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
ஈரானிடமிருந்து ஆயுதங்களைக் கொள்வனவு செய்ய முற்படவில்லை என இலங்கை அரசாங்கம் தெரிவித்துள்ளதாகப் பற்றீசியா புட்னீஸ் குறிப்பிட்டுள்ளார். வடகொரியா, ஈரான் ஆகிய நாடுகளிடமிருந்து ஆயுதங்களைக் கொள்வனவு செய்ய இலங்கை அரசு முயற்சி செய்வது தொடர்பான தகவல் குறித்து இலங்கையிடமிருந்து காலம் கடந்தே பதில் கிடைத்துள்ளது.
அமெரிக்காவின் கவலையைப் புரிந்து கொள்வதாகவும் இது தொடர்பாக அரசாங்கம் ஆராய்வதாகவும் இலங்கை வெளிவிவகார அமைச்சின் அமெரிக்கப் பிரிவிற்கான பணிப்பாளர் நாயகம் கிசேனுகா செனிவிரத்ன (கடந்த 16ஆம் திகதி) தெரிவித்தார்.
ஈரானிடமிருந்து ஆயுதங்களைக் கொள்வனவு செய்ய முயற்சித்தமை தொடர்பான குற்றச்சாட்டை நிராகரித்துள்ள கிசேனுகா செனவிரத்ன வடகொரியாவிடமிருந்து ஆயுதங்களைக் கொள்வனவு செய்ய முயற்சிப்பது குறித்து எதனையும் தெரிவிக்கவில்லை என இத் தகவல் பரிமாற்றக் குறிப்பில் பற்றீசியா புட்னீஸ் தெரிவித்துள்ளார்.
அதேவேளை இலங்கை அரசாங்கத்தின் மறுப்புத் தொடர்பாகத் தமது கருத்தையும் இத்தகவல் பரிமாற்றக் குறிப்பில் பற்றீசியா இணைத்துள்ளார். இது குறித்து இத்தகவல் பரிமாற்றக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
ஈரானிடமிருந்து ஆயுதங்களைக் கொள்வனவு செய்ய முயற்சித்தமை தொடர்பான குற்றச்சாட்டை இலங்கை அரசாங்கம் நிராகரித்துள்ள போதிலும் இவ்விரு நாடுகளுக்கும் இடையிலான அண்மைய தொடர்புகள் சந்தேகங்களைத் தோற்றுவிக்கின்றன.
2009ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 6ஆம் திகதி இலங்கையின் படைத்தளபதி ஈரானியப் படைத்துறை ஆலோசகர் அஸ்காரி நெக்கை சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். ஈரானியப் படைத் தளபதி பிரிகேடி யர் முகமட் அமினி ரஞ்ஜபார் தலைமையிலான படை அதிகாரிகள் குழுவொன்று இலங்கைக்கு வரவுள்ளது.
இதன்போது இவ்விரு நாடுகளுக்கும் இடையில் எதிர்காலத்தில் படைத் தரப்பு உறவுகளை அதிகரிப்பது குறித்துப் பேச்சுவார்த்தை நடத்துவது தொடர்பாக இலங்கையின் படைத்தளபதியும் ஈரானியப் படைத்துறை ஆலோசகர் அஸ்காரி நெக்கும் சந்தித்துப் பேசியுள்ளனர்.
அதேவேளை ஜப்பானியத் தூதரகத்தின் அரசியல் பணியகத்தில் நடந்த சந்திப்பு ஒன்றில், ஆயுதங்கள் மற்றும் அணுசக்தி தொழில் நுட்பங்களைக் கொள்வனவு செய்வது தொடர்பாக ஈரானியக் குழுவுடன் இலங்கை அரசாங்கம் பேச்சுவார்த்தை நடத்தும் வாய்ப்புக்கள் உள்ளதாக ஜப்பானியப் படைத்துறை ஆலோசகர் கவலையுடன் கலந்துரையாடி இருந்தார் என இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் பற்றீசியா புட்னீஸ் அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்திற்கு அனுப்பிய தகவல் பரிமாற்றக் குறிப்பில் தெரிவித்துள்ளார்.

0 comments:

Post a Comment