பல்கிப் பெருகியிருக்கின்றன தொலைக் காட்சிகளும், இதர ஊடகங்களும். நாள் முழுக்க திரைப்படங்களையும், பாடல்கள், நகைச்சுவைக் காட்சிகள், ரசித்தவை, பிடித் தவை, சாதித்தவை, நெஞ்சைத் தொட்டவை, உங்கள் சாய்ஸ், டெலி சாய்ஸ், நேயர்கள் தொலை பேசியில் அழைப்பது, நேயர்களை தொலை பேசியில் அழைப்பது என்று திரைப்படங்கள் சார்ந்த நிகழ்ச்சிகளையும் ஒரு நாளில் 24 மணி நேரம் போதாமல் ஒளிபரப்பித் தீர்க்கும் தொலைக்காட்சிகள் ஒரு பக்கம். 24 மணி நேரத் திற்கும் செய்திகள் வழங்க முடியாமல், திரும்பத் திரும்ப ஒரே செய்தியை ஒளிபரப்பியோ, அல்லது புதிதாக செய்தியை உருவாக்கியோ, உப்புக்குப் பெறாதவற்றை பெரிதாக்கியோ நேரத்தை ஓட்டும் தொலைக் காட்சிகள் இன்னொரு பக்கம்.
ஒரு தொலைக்காட்சி நிறுவனம், தனது ஒரே ஒரு அலைவரிசை மூலம் அத்தனை நிகழ்ச்சி களையும் ஒளிபரப்பியது ஒரு காலம். இன்று கிட்டத்தட்ட அத்தனை ஊடகங்களும் ஒன்றுக் கும் மேலாக அலைவரிசைகளை வைத்திருக் கின்றன. முதன்மை அலைவரிசை ஒன்று. அது தவிர்த்து திரைப்படங்கள், பாடல்கள், நகைச்சுவைக் காட்சிகள், குழந்தைகள், செய்தி என தனித்தனி அலைவரிசைகள் இருக்கின்றன. பட்டியல். இப்போது இருக்கும் சூழலில் மொழி மாற்றுத் திரைப்படங்களுக்கு இருக்கும் வரவேற்பைப் பார்த்தால் அதற்கென்று தனி அலைவரிசையை ஒவ்வொரு நிறுவனமும் தொடங்கினாலும் வியப்பிற்கு ஒன்றுமில்லை. சரி, இத்தனையும் தனித்தனியாகக் கிடைத்தால் முதன்மை அலை வரிசைக்கு என்ன வேலை என்று பார்த்தால், இது எல்லாவற்றையும் அதில் தொகுத்துத் தருவது தான்.
நாம் மேலே சொன்னது மாநில அளவிலான நிறுவனங்கள் குறித்து மட்டும் தான். இந்திய அளவில் செய்தித் தொலைக்காட்சி நிறுவனங்கள் கூட அரசியல் செய்திக்கென ஒன்று; வட்டார செய்திக்கென ஒன்று, வணிகத்திற்கு ஒன்று, வாழ்வியலுக்கு ஒன்று, பயணத்திற்கு ஒன்று என்று எண்ணற்ற அலைவரிசைகளை உருவாக்கி வருகின்றன... விளையாட்டு தொலைக்காட்சிகள் எல்லாம் கிரிக்கெட்டுக் கென தனி அலைவரிசையை உருவாக்கியதைப் போல! இப்படி அலைவரிசைகளின் எண்ணிக்கை அதிகமாகி, எதை வேண்டுமானாலும், எந்த நேரத்திலும் பார்த்துக்கொள்ளலாம் என்ற வாய்ப்புக்கேற்ப தேர்வு செய்யும் வசதி மக்களுக் குக் கிடைத்துவிட்டது. ஆனால் பாவம் செய்தித் தொலைகாட்சி நிறுவனங்கள் தான், செய்தி கிடைக்காமல் அல்லாடுகிறார்கள்.
செய்திக்கு அலையும் ஊடகங்கள்
எங்கேயாவது, எந்த மூலையிலாவது (தெளி வாக இருங்கள்... மூளையில் அல்ல) வித்தியாச மாக, அதிசயமாக ஏதாவது நடந்து விடாதா அதைப் பிடித்துக் கொண்டு இரண்டு நாட்களை ஓட்டி விட முடியாதா என்று தேடி அலைகிறார்கள். இவர்கள் சொல்வதற்கு செய்தி கள் எதுவும் இல்லையா என்றால், நிச்சயம் உறுதியாகச் சொல்லலாம்.. மக்களுக்குத் தேவையான ஆயிரம் செய்திகள் இன்னும் தொடப்படாமலேயே இருக்கின்றன. ஆனால் அவற்றிற்கெல்லாம் நியூஸ் வேல்யூ கிடையாது என்று ஒதுக்கிவைத்துவிடுவார்கள். அதனால் தான் செய்திப்பஞ்சம் தலைவிரித்தாடுகிறது. இது தொலைக்காட்சிகளுக்கு மட்டும் தானா என்றால் நிச்சயம் இல்லை. அரசியல் வார இதழ்கள் பாடும் திண்டாட்டம் தான். பத்திரிகை விற்றேயாக வேண்டும். நித்யானந் தாவாக இருந்தாலும், ஈழப்பிரச்சினையாக இருந்தாலும் இரண்டும் அவர்களுக்கு ஒன்று தான். சர்க்குலேசனுக்கு எது முக்கியம்? அது தான் கேள்வி. செரினாவாக இருந்தாலும், ஜெகஜ்ஜால ஜெயாவாக இருந்தாலும் கவலையில்லை. நீ சொல்லாததை நான் சொன்னேன். நான் சொன்னது முந்தி நடந்தது என்று எப்படியாவது போட்டியில் பெட்டிக் கடைகளில் விற்றாக வேண்டும். எதுவும் கிடைக்கவில்லையென்றால் இருக்கவே இருக்கிறது அரசியல் ஆருடம். மக்களின் ரசனை மாறிக் கொண்டே இருக்கிறது. மக்களை சமாளிக்க இவர்களும் திண்டாடித்தான் போகிறார்கள். தொடக்கத்தில் ஒரே தொலைக்காட்சியாக அரசுத் தொலைக் காட்சி இருந்த காலத்தில் கடமை யாக இருந்து பார்த்த மக்கள், பல்வேறு ஊடகங்களும் அணிவகுத்த பிறகு தேர்வு செய்யும் உரிமை பெற்றவர்களானார்கள். திரைப்பட நிகழ்ச்சிகள் மட்டும் இருந்த நிலையில், மக்களின் ரசனை மாற்றம் என்று ஒரே நேரத்தில் நெடுந் தொடர்கள் படையெடுத்தன. பிறகு அவற்றில் சலிப்பு தட்டியதும், போட்டி நிகழ்ச்சிகள் அரங்கேறின. அவற்றையும் நாடகங்களுக்கு நிகராக நடிக்கவைத்து படம் பிடித்தார்கள். இந்தக் கால மாற்றத்தில் இப்போது புலனாய்வு யுகம். எந்த தொலைக்காட்சியை இரவு 10 மணிக்கு பார்த்தாலும், திகில் ஓசைகளுடன் மர்மக்குரலில் பின்னணி ஒலிக்க கேமராக்கள் எதையோ தேடித் திரிவது போன்ற காட்சிகள் தான் கண்ணுக்குப் படுகின்றன. இடையிடை யில் கோட் சூட் மாட்டிக் கொண்டு யாராவது ஒருவர் பேசிக் கொண்டிருப்பார். கேமரா கோணங்கள் கண் வலி வரும் அளவுக்கு திரும்பி திரும்பி கழுத்துக்கும் சேர்த்து வலியைக் கொடுக்கும்.
அவைதான் விஜய் தொலைக்காட்சியின் நடந்தது என்ன? குற்றமும் பின்னணியும், சன் தொலைக்காட்சியின் நிஜம், கலைஞர் தொலைக்காட்சியின் பூதக் கண்ணாடி, ஜீ தொலைக்காட்சியின் நம்பினால் நம்புங்கள் இன்னும் கிட்டத்தட்ட அத்தனை துக்கடா நிறுவனங்களும் இரவு 10 மணிக்கெல்லாம் ஊளையிடத் தொடங்கிவிடுகின்றன. இவற்றில் மூட நம்பிக்கைகள், சாமியார் மோசடிகள், பேய், பில்லி, சூனியம், ஆவி போன்றவை குறித்த நிகழ்ச்சிகள் அதிக அளவில் இடம்-பெறுகின்றன்.
அடடா.. பெரியார் தொலைக்காட்சியில் தோலுரிக்கப்பட வேண்டியவை எல்லாம் இப்போதே சந்திக்கு வருகின்றனவே... நம் பணியை பலரும் பங்குபோட்டு முனைப்புடன் செய்கிறார்களே என்று வரவேற்கும் நோக்-கோடு தான் இந்நிகழ்ச்சிகளை மகிழ் வோடு எதிர்கொண்டோம். ஆனால் நிலை தலைகீழாக இருக்கிறது. எப்போதும் போல் தான் ஊடகங்கள் இந்நிகழ்ச்சிகளையும் அணுகு-கின்றன... வணிக நோக்கோடு! ஆம். பத்திரிகைகளுக்கு சர்க்குலேசன் கணக்கு என்றால் தொலைக்காட்சிகளுக்கு டி.ஆர்.பி தான் கணக்கு. எந்தெந்த விசயங்கள் மக்களுக்குப் பிடிக்கும் என்று இவர்கள் கருது கிறார்களோ அதை நோக்கி ஓடுகிறார்கள். காதல் தற்கொலை, கொலை, கள்ளக்காதல் என்று நாளிதழ்களில் வரக்கூடிய செய்திகளை வெட்டி எடுத்து வைத்துக்கொண்டு கேமரா வோடு கிளம்புகிறார்கள். தினசரி இந்தச் செய்தி-கள் வந்தபோதும், அதில் சுவாரஸ்யம் இருக்க வேண்டுமே? இல்லாத நாட்களுக்கு என்ன செய்வது? அங்கே தான் எப்போதும் இருக்கின்ற சரக்காகிய, அவர்களுடைய வார்த்தைகளிலேயே சொல்லப் போனால் அமானுஷ்யங்கள் வருகின்றன. ஒவ்வொரு கிராமத்திற்கென்றும் கண்டிப்பாக ஏதேனும் ஒரு மூட நம்பிக்கை இருக்கிறது. இவற்றை படம்பிடித்து வைத்துக் கொண்டால் எப்போது வேண்டுமானாலும் ஒளிபரப்பலாம்.
எனவே நடப்பில் இருப்பவை, முன்பு நடந்தவை, இருப்பதாகக் கேள்விப்பட்டவை, புரளி கிளப்பியவை என்று மூட நம்பிக்கை களைத் தேடி இவர்களது பயணம் தொடங்கு கிறது. இந்நிகழ்ச்சிகளின் தொடக்க காலத்தில், மிக முக்கியமான மடத்தனங்களை தோலுரித் துக் காட்டினார்கள் என்பது மறுக்க முடியாத தாகும். வெறும் கையால் பல்லாயிரம் மக்களுக்கு முன்பு ஓபன் தியேட்டர் ஆபரேஷன் செய்த அஸ்லம் பாபா தொடங்கி, சரஸ்வதி மஹால் ஓலைச் சுவடிகள் என்ற பெயரில் புதிதாக ஓலைச் சுவடிகளைத் தயாரித்து, கண்டவற்றையும் கிறுக்கி பழையன போல காட்டி மக்களை ஏமாற்றிய நாடி ஜோதிடம் வரைக்கும் பலவற்-றையும் ஆராய்ந்த இவர்கள் நிகழ்ச்சி பிரபலமாக ஆக, மேலும் விஷயங்களைத் தேடி அலைய வேண்டியதாயிற்று. அந்தநிலையில் தான் என்ன செய்தி கிடைத்தாலும் அதனை மிகைப்படுத்திக் காட்டும் தேவை எழுகிறது. ஒன்றுக்குமில்லாத அற்பமான செய்திகள் கூட இவர்களின் பில்ட்-அப்பால் பிரபல-மாகின. அங்கே ஒரு பாம்புச் சித்தர், இங்கே ஒரு மர்மக் கோயில், புனேவில் ஒரு மர்ம வீடு, மண்டைஓட்டு பூஜை என்று கதைகளைத் தேடி அலைகிறார்கள். இவை எல்லாமே அப்படியே உண்மை தானா?
பின்வாங்கும் கடல்
குஜராத் கடற்கைரை ஒன்று. காலையில் இருக்கும் இடத்திலிருந்து மாலை வரவர கடல் சற்று பின்வாங்கிச் செல்கிறது. அங்கே ஒரு கோயில் இருக்கிறது. சில ஆண்டுகளுக்கு முன் மூழ்கிய இடமாக இருக்கலாம். மதியம் முதல் மாலை வரை மக்கள் அங்கு சென்று வழிபடு-கிறார்களாம். மக்கள் வருவதற்காக கடல் பிரிந்து வழிவிடுகிறதாம். பழைய ஏற்பாட்டுக் கதைகளைக் கடன் வாங்கி பெரும் ஆச்சரியத்-தோடு இவர்கள் கொடுக்கும் செய்தி அறிவிய-லின் படி சரியானதா? இங்கே மட்டும் தான் இந்த ஆச்சரியம் நிகழ்கிறதா என்றால், அதுதான் இல்லை. கடலின் இயல்பே புவியீர்ப்பு, காந்தப் புலத்தின் தேவைக்கேற்ப, நிலத்தின் தன்மைக்கேற்ப, முன்னேறுவதும், பின் வாங்குவதும் தான். திருச்செந்தூரில் கடல் பின்வாங்குவதும், கன்னியாகுமரியில் கொந் தளிப்பதும், பின் பழைய படி திருச்செந்தூரில் பழைய இடத்திற்கு வந்து குளச்சலில் பின்வாங்குவதும் நாம் கண்கூட பார்த்துவரும் அன்றாட நிகழ்வுகளாகும். வங்கக் கடலில் இந்நிலை என்றால், குஜராத் அமைந்துள்ள அரபிக் கடல் அதிகம் அலையடிக்காத, கரைகளில் அதிகம் ஆழமில்லாத அமைப்பு கொண்டது. அங்கு வெகு இயல்பான விசயம் இது. ஆனால் அங்கு முழுகிப்போன ஒரு கோயிலின் எச்சங்கள் இருப்பதுதான் அமானுஷ்யம் என்று பிரபலாமாகக் காரணம். இப்படிப்பட்ட இடங்களை விளம்பரம் செய்யும் போது, அவற்றுக்கு முறையான அறிவியல் விளக்கங்களை அளிப்பது மிகமிகக் குறைவே. இது ஒரு அசாதாரண நிகழ்வு என்பது அனைவரும் அறிந்தது தான். இது இயற்கையின் விந்தை என்பதும் உண்மைதான். ஆனால் இது இங்கு மட்டுமல்ல.. உலகின் பல இடங்களிலும் இருக்கும் நிலைதான் என்பதை எடுத்துக் கூறத் தவறிவிடுகிறார்கள். அதன் காரணமாக இவை அமானுஷ்யங்களாக நிலைத்துவிடுகின்றன.
புற்றுநோயைக் குணப்படுத்தும் சாமியார்
சிவகங்கை மாவட்டத்திலொரு சாமியார் வெறும் எலுமிச்சைப் பழத்தைக் கொடுத்து, பிறகு ஏறி இரண்டு மிதி மிதித்து புற்று-நோயைக் குணப்படுத்திவிடுகிறார் என்று ஒரு நாள் காட்டினார்கள். இப்படி நடக்க வாய்ப்பிருக்கிறதா? இதற்கு மருத்துவ ரீதியான விளக்கம் என்ன? முறையான ஆய்வு செய்து தான் பக்தர்கள் நோய் இருந்ததையும், சாமியாரின் அருளால் போய்விட்டதையும் தெரிந்துகொண்டார்களா? என்பது குறித்து பெரிதும் இந்நிகழ்ச்சிகள் அக்கறை கொள்ள-வில்லை. 30 நிமிட நிகழ்ச்சியில் விளம்பரம் போக இருக்கும் 20 நிமிடத்தில், 18 நிமிடம் இது போன்ற காட்சிகளையும் செய்திகளையும் காட்டிவிட்டு, கடைசியில் இரண்டு கேள்வி-களை மட்டும் கேட்டு விட்டால் போதுமா? காட்சி ரீதியாக மூடநம்பிக்கைகளைக் காட்டியவர்கள், அதற்கான விளக்கத்தையும் காட்சி ரீதியாகக் காட்டினால் தானே மக்கள் மனதில் புரியும்?
மந்திரமா? தந்திரமா? என திராவிடர் கழக மேடைகளில் சாமியார்கள் செய்யும் மோசடி வித்தைகளை செய்து காட்டி, அவை எப்படி செய்யப்படுகின்றன என்ற விளக்கத்தையும் செய்து காட்டுவதால் தானே மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுகிறது. தீமிதித்தல், அலகு குத்தி கார் இழுத்தல் போன்ற மூடத்தனங்களை கடவுள் இல்லை கடவுள் இல்லை என்ற முழக்கத்தோடு செய்துகாட்டி, கடவுள் சக்திக்கும் இதற்கும் தொடர்பு இல்லை என்பதை விளக்கி, இது எப்படி சாத்தியமா-கிறது என்று காட்டுவதன் மூலம்தானே இவை நிறைவு பெறுகின்றன. வெறுமனே, மூடநம்பிக்கைகள் நிறைய இருக்கின்றன என்று மட்டும் காட்டுவது எந்தப் பயனையும் தராது. அதிலும் வெகு ஜாக்கிரதையான வார்த்தைகளில் இவர்கள் நம்புகிறார்கள்; மக்களின் நம்பிக்கை என்று பசப்பி, இவை மூடநம்பிக்கைகளாகி விடாமல் இருக்க வேண்டும் என்று விளக்கெண்ணெய் வியாக்கியானம் சொல்வது போதுமானதா? இந்தக் கேள்விகள் தான் நம்மைக் குடைந்தன. குடைகின்றன. ஆனால் இவற்றையும் தாண்டி இந்த நிகழ்ச்சிகளின் உண்மைத்தன்மையை நாம் அறிந்துகொள்ளும் சூழல் களத்தில் கிடைத்தது. மூடநம்பிக்கை எங்கே தலையெடுத்தாலும் அவற்றை முற்றுமுழுதாக அழித்து ஒழிக்கும் வரை திராவிடர் கழகம் பணியாற்றும் என்பது தமிழ்நாட்டு வரலாறு. தியாகராய நகர் திடீர் பிள்ளையார் -- சுயம்புவாக பூமியிலிருந்து கிளம்பிய பிள்ளையார் என்பதாக அனைத்து ஊடகங்களும் விளம்பரம் கொடுத்து, சங்கராச்சாரி வரைக்கும் உண்மைதான் என்று பிள்ளையாருக்கு அத்தாரிட்டி கொடுத்த நிலையில் தந்தை பெரியார் களம் இறங்கி அதே இடத்தில் பொதுக்கூட்டம் போட்டு தோலுரிப்போம் என்று முழங்கியபின்னர் அன்றைக்கும் முதல்வராக இருந்த கலைஞரின் உடனடி நடவடிக்கையில் பிள்ளையாரும், உண்டியலும் கைப்பற்றப்பட்டது. பின்னர் நடந்த விசாரணையில், அதற்குப் பின்னணியில் இருந்து செயலாற்றியவர்கள் கே.எம்.சுப்பிர மணியம் என்ற பார்ப்பனரும், செல்வராஜ் என்ற காவலரும் தான் என்ற உண்மை வீதிக்கு வந்தது.
பால் குடித்த பிள்ளையார் விரட்டியடிப்பு
பிள்ளையார் பால் குடிப்பதாகச் சொல்லப் பட்டபோது, தானே தமுக்குடன் களத்தில் இறங்கி, பிள்ளையார் பால் குடிப்பதை நிரூபித்தால் ஒரு லட்சம் ரூபாய் பரிசு என்று அறிவித்து அதை தமிழ்நாட்டில் விரட்டியடித் தவர் தமிழர் தலைவர் கி.வீரமணி. அதே பாணியில் எண்ணற்ற இடங்களில் எப்போதெல்லாம் பேய் புரளிகள் கிளம்பு கிறதோ, ஆவி, சூனியம் என்று மக்கள் பீதியடைந்ததாக செய்தி கிடைக்கிறதோ அங்கேயெல்லாம் திராவிடர் கழகம் உடனடியாக செயலில் இறங்கியிருக்கிறது. மனநல மருத்துவர், மந்திரமா? தந்திரமா? நிகழ்ச்சியாளர், பேச்சாளர் என குழுவாக மக்கள் மத்தியில் சென்று பிரச்சாரத்தில் ஈடுபட்டு மூடநம்பிக்கைகளை முறியடித் திருக்கிறது.
அதே போல, தொலைக்காட்சிகள் எடுத்துக் காட்டும் இத்தகைய செய்திகளைக் கேட்டதும், பல இடங்களில் சென்று பிரச்சாரம் செய்தும் வருகிறது. தருமபுரி அருகே பெரிய குரும்பட்டி என்னும் கிராமத்தில் யாரோ ஏற்படுத்திய வதந்தியால் ஊரில் இரவில் பேய் நடமாட்டம் உள்ளதாக கூறி அறியாமையின் காரணமாக அக்கிராமத்தில் உள்ள அத்தனை வீடுகளிலும் கதவுகளிலும், மரங்களிலும் நாமத்தை போட்டு வைத்துள்ளனர். இந்தச் செய்தி நாளிதழ் களிலும், தொலைக்காட்சிகளிலும் பரபரப்பாக் கப்பட்டது. இது தொடர்பாக திராவிடர் கழகப்பொதுச்செயலாளர் கவிஞர் கலி.பூங்குன் றன் அறிவுறுத்தலின் பேரில் களம் இறங்கி திராவிடர் கழகம் மற்றும் பகுத்தறிவாளர் கழகத் தோழர்கள் அம்மக்களிடம் பிரச்சாரம் செய்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர். பொதுமக்களிடம் கேட்கும்போது நாங்கள் யாரும் பேயை பார்க்கவில்லை. ஆனால் யாரோ பார்த்ததாக கூறி வதந்தியை ஏற்படுத்தி, வீட்டுக்கு வீடு நாமம் போட்டு உள்ளனர் என்றும், வேறு சிலர் பள்ளியில் படிக்கும் மாணவர்களிடம் யாரோ சொன்னதாக கூறி பள்ளிக்கூட பிள்ளைகளே வீட்டுக்கு வீடு நாமம் போட்டு விட்டார்கள். அதனால் நாங் ளும் போட்டோம் என்று சொன்னார்கள்.
ஊடகங்கள் சொல்வது உண்மையா?
நடுநிலைப் பள்ளிக்கு சென்று மாணவர் களிடமும், அடுத்தநாள் பொதுமக்கள் மத்தியிலும் பிரச்சாரக் கூட்டம் நடைபெற்றது. அக் கிராமத்தில் உள்ள அனைத்து பெண்களும் முதியவர்களும், இளைஞர்களும் பள்ளி மாணவ-, மாணவிகளும் அமர்ந்து கேட்டனர். அதன் பின் கிராமத்தில் பேயைக் கண்டுபிடித்துக் கொடுத்தாலோ அல்லது நிரூபித்து காட்டி னாலோ, மாவட்ட திராவிடர் கழகத்தின் சார்பில் ரூ.50 லட்சம் பரிசளிக்கப்படும் என்ற அறிவிப்பையும் வெளியிட்டனர். அதன்பிறகு மக்கள் அவர்களாகவே முன்வந்து மற்ற ஊடகங்களெல்லாம் பேய், பேய் என்று மூலை முடுக்கெல்லாம் படம் எடுத்துக்கொண்டு போய் எங்கள் ஊரையே அசிங்கப்படுத்தி விட்டார்கள். நீங்கள் மட்டும்தான் பேய் இல்லை என்று தைரியம் சொல்லி எங்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தினீர்கள். புரளி இவ்வளவு பெரியதாகிவிட்டது. இனி இதை யெல்லாம் நம்பமாட்டோம். தொடர்ந்து எங்கள் ஊரில் பிரச்சாரம் செய்யுங்கள் என கேட்டுக் கொண்டனர்.
பொய்யைப் பரப்பிய தொலைக்காட்சி
இதே போல தருமபுரி மாவட்டம் அரூர் வட்டத்தைச் சேர்ந்த அல்ட்ராபட்டி கிராமத் தில் பேய் பயம் இருப்பதாக தொலைக்காட்சி நிகழ்ச்சியைப் பார்த்து அங்கு சென்ற திராவிட இயக்கத் தமிழர் பேரவைத் தோழர்கள் அங்கேயே தங்கி அம்மக்களுக்கு பேய் பயத்தைப் போக்கியபோது கிடைத்த தகவல் இன்னும் முக்கியமானது. அதுதான் ஊடகங் களின் உண்மைத் தன்மைக்கு ஓர் உறை கல். ஏற்கெனவே யாரோ பார்த்தாதாக, யாரோ சொன்னதாக நம்பிக்கிடந்த மக்கள் இயற்கையாக நடந்த மரணங்களுக்கும் பேய் தான் காரணம் என்று நம்பிக்கொண்டிருக்க, மேலும் சிலரை அந்தக் குறிப்பிட்ட தொலைக் காட்சியே மிகையாகப் பேசச் செய்து வெளி யிட்டிருக்கிறது. சுவாரஸ்யத்திற்காக அதிகப் படியான திகிலை உருவாக்குவதற்காக அரை லிட்டர் ரத்தம் தன் மீது கொட்டியதாகச் சொன்னவர் தான் சொன்னது பொய் என்பதனை நேரில் ஒப்புக் கொண்டார். தான் தொலைக்காட்சியில் தெரிவதற்காக அவர் இச்செயலை செய்தார் என்பதும் வெளிப்பட்டது.
இப்படித்தான் எண்ணற்ற செய்திகள் ஊடகங்களால் பெரிது செய்யப்படுகின்றன. இந்த நிலையில் நமக்கு எழுந்த மற்றொரு அடிப் படையான கேள்வியும் இந்த நிலையை உறுதி செய்கிறது. முக்கியத் தொலைக்காட்சிகளில் எல்லாம் இத்தகைய நிகழ்ச்சிகள் வருகின்றன; மூடநம்பிக்கைகளை ஊடகங்களில் காட்டு கிறார்கள் என்று தெரிந்தும் எப்படி சாமியார் களும், சாமியாடிகளும், ஜோதிடர்களும் இந்நிகழ்ச்சிகளுக்கு பேட்டி கொடுக்கிறார்கள்? என்ற கேள்வி நம்முள் எழுந்தது. ஏனெனில், இது போன்ற தகவல்கள் வந்து நாமும் களத்தில் இறங்கி செய்தி சேகரிக்கச் செல்லும் போதெல்லாம், (திராவிடர் கழகத்தவர், பெரியார் கொள்கைக்காரர், கருப்புச்சட்டைக் காரர் என்பதையெல்லாம் மறைத்துக் கொண்டும்) புகைப்படம் எடுக்கக் கூட மக்கள் அனுமதிக்க மாட்டார்கள்; பேட்டி தர மாட்டார்கள். சர்ச்சைக்குரிய சாமியாடிகள் விரட்டியடிப்பார்கள். இதற்காகவே படப்பிடிப்புக் கருவிகளை மறைவாக வைத்துக் கொண்டு தான் செல்வோம். ஆனால் இவ்வளவு பிரபல மான தொலைக்காட்சி நிகழ்ச்சிக்கு, பெரிய பெரிய கருவிகளோடு சென்று எப்படி பேட்டி எடுக்கிறார்கள். மக்களும் சாமியார்களும் எப்படி பதில் சொல்கிறார்கள் என்று சிந்தித்தால், பிரபலமாவதற்கான வழியாக இதைக் கருது கிறார்கள் என்று நம்மால் உணர முடிகிறது.
முழுமையாக மூடநம்பிக்கைகளை முறி யடிக்கும் நோக்கம் இல்லாமல், பரபரப்புக்காக ஒளிபரப்பப்படும் இத்தகைய நிகழ்ச்சிகள் சாமியார்களுக்கு, எதிர்ப்புக்கு பதில் விளம்பரத் தையே தருகின்றன. இன்னும் சில நாட்களில், நிஜம் புகழ் சாமியார், குற்றம் புகழ் ஜோதிடர் என்று இவர்கள் தங்களை விளம்பரப்படுத்திக் கொண்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. அதிலும் விஜய் தொலைக்காட்சியும், சன் தொலைக்காட்சியும் ஓரளவுக்காவது கடைசி யில் இவை மூடநம்பிக்கைகள் தான் என்று வாயளவிலாவது சொல்கின்றன. ஜீ தமிழ் தொலைக்காட்சியில் வரும் நம்பினால் நம்புங் கள் நிகழ்ச்சியோ தலைப்புக்கேற்ற படி, இவை யெல்லாம் உண்மை என்றே முழங்குகிறது. நம்பினால் நம்பு; நம்பாவிட்டால் போ இந்த அமானுஷ்யங்கள் எல்லாம் உண்மையானவை என்று பயமுறுத்துகிறது.
பிரச்சாரம் செய்வது எங்கள் பணியல்ல; நாங்கள் தெர்மாமீட்டரைப் போன்றவர்கள். பிரச்சினை இருப்பதை எடுத்துக் காட்டுவது தான் எங்கள் பணி என்று ஊடகக்காரர்கள் பசப்பக்கூடும். ஆனால் தெர்மாமீட்டர், அளவுக்கு மேல் காட்டி காய்ச்சல்காரனை மேலும் பீதியில் உறையச் செய்கிறது என்பது தான் உண்மை நிலவரமாகும். வெறும் தெர்மாமீட்டர்களால் எந்தப் பயனும் இல்லை; அவற்றிற்கு சரியான மருந்து அளிப்பதுதான் நோயைத் தீர்க்கும் வழியாகும்.
இந்நிலையில் நமது கடமை என்பது என்ன? அரசின் சமூக சீர்திருத்தத் துறை இவ்விசயத் தில் கவனம் எடுத்துச் செயல்பட வேண்டும். சாமியார்களைக் கண்காணிக்க காவல்துறையில் தனித்துறை வேண்டும் என்று நீண்ட காலமாக திராவிடர் கழகம் கோரி வருகிறது. அதேபோல், ஊடகங்களில் வரும் இச்செய்திகளை கவனித்து, உடனுக்குடன் நடவடிக்கை எடுக்கவும், அவ்வாறு பிரச்சாரத்தில் ஈடுபடும் தோழர் களுக்கு உரிய ஒத்துழைப்பை, உதவியை செய்யவேண்டியது அரசின் கடமையாகும்.
இத்தகு செய்திகள் ஊடகங்களில் வரும் போதே திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள் அறிவித்திருக்கும் பகுத்தறிவு பறக்கும் படையாக செயல்பட்டு, அந்தந்த பகுதித் தோழர்களே களத்தில் இறங்க வேண்டும். ஒன்று அந்த மூடநம்பிக்கைகளை முறியடிக்க வேண்டும். அல்லது அத்தகைய செய்திகள் வதந்தி, ஊடகங்களில் பெரிது செய்யப்பட்டவை எனில் அவற்றை மக்கள் மத்தியில் எடுத்துக் காட்டி ஊடகங்களின் உண்மைமுகத்தை உரித்துக் காட்ட வேண்டும். இப்பணியை கருப்புச்சட்டைக்காரர்கள் மட்டும்தான் என்றல்ல... அறிவும், மானமும், சமூக அக்கறை யும் உள்ள ஒவ்வொருவரும் செய்ய வேண்டும். ஏனெனில் அதைத்தான் தெரியாத்தனமாக நமது அரசியல் சட்டமும் சொல்லித் தொலைக் கிறது, அறிவியல் மனப்பான்மையை வளர்ப்பது ஒவ்வொரு குடிமகனின் கடமை என்று! அதை அரசும் செய்ய வேண்டும்; மக்களும் செய்ய வேண்டும்.
//அரசின் சமூக சீர்திருத்தத் துறை இவ்விசயத் தில் கவனம் எடுத்துச் செயல்பட வேண்டும்//.
ReplyDeleteஅப்படி நடவடிக்கை எடுத்தா அவுக தொலைக்காட்சிக்கு எப்படி நிகழ்ச்சி கிடைக்கும்.