Monday, October 10, 2011

புலிகளுடன் ரகசியமாக பேசிய அமெரிக்கா,ஆதாரம்


ஜனாதிபதி ஒபாமாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர்களில் ஒருவர், கடந்த வாரம் ரகசியப் பயணம் ஒன்றை ‘பெயர் குறிப்பிடாத அரபு நாடு’ ஒன்றுக்கு மேற்கொண்டார் என்ற தகவல் தற்போது கசிந்துள்ளது. இந்த ரகசியப் பயணத்தின்போது, அங்கு வைத்து பாகிஸ்தான் உயர் ராணுவ அதிகாரி ஒருவரைச் சந்தித்தார் என்றும் கூறப்படுகின்றது.
இதுவே கொஞ்சம் சீரியசான விஷயம். அதைவிட வில்லங்கமான விஷயம் ஒன்றும் இந்த ரகசிய சந்திப்பில் உள்ளத!
குறிப்பிட்ட தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அரபு நாடுவரை சென்றது, பாகிஸ்தான் ராணுவ உயரதிகாரியை மாத்திரம் சந்திக்க அல்ல! அவருடன் சேர்த்து, தீவிரவாத அமைப்பான ஹக்கானி குழுவின் முக்கிய தளபதிகள் இருவரையும் சந்தித்திருப்பதாக, உளவு வட்டாரங்களில் பேச்சு அடிபடுகின்றது.
தீவிரவாத அமைப்பான ஹக்கானி குழுதான், சமீப நாட்களில் அமெரிக்க ராணுவத்துக்கு எதிரான தாக்குதல்களை நடாத்துவதில் முன்னிற்கும் அமைப்பு. சில நாட்களுக்குமுன் ஆப்கான் தலைநகரில் உள்ள அமெரிக்க தூதரகத்தின்மீது தாக்குதல் நடாத்தியதும் இந்தக் குழுதான் என்பது அமெரிக்காவின் குற்றச்சாட்டு.
அமெரிக்க ராணுவத்தின் அதியுச்ச அதிகாரியாக இருந்த (கடந்த வாரம் அந்தப் பதவியிலிருந்து விலகினார்) மைக் முல்லன், “ஹக்கானி குழுவுக்கும், பாகிஸ்தான் உளவு அமைப்பு ஐ.எஸ்.ஐ.க்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது” என்று குற்றம் சாட்டியது, அமெரிக்க – பாகிஸ்தான் உறவில் விரிசலை ஏற்படுத்தி இருந்தது.
இப்படி நேரடியாக குற்றம் சாட்டிய பின்னரும், ஹக்கானி குழுவின் தளபதிகளை அமெரிக்கா ஏன் ரகசியமாகச் சந்திக்க வேண்டும்? அதுவும், அந்த தீவிரவாதக் குழுவுடன் தொடர்பு வைத்திருப்பதாகக் குற்றம் சாட்டப்பட்ட அதே பாகிஸ்தானின் ராணுவ உயர் அதிகாரியின் உதவியுடன் சந்திக்க வேண்டும்?
அதுதான், அமெரிக்க அங்கிள் சாமின் வழமையான டீலிங் ஸ்டைல்!
தாம் நேருக்கு நேராக மோதிக் கொள்பவர்களுடன், மற்றொரு பக்கமாக ரகசிய டீலிங் ஒன்றையும் வைத்திருப்பார்கள் அவர்கள். இரண்டும், வெவ்வேறு இலாகாக்களினால் ஹான்டில் பண்ணப்படும்!
இந்த ரகசிய சந்திப்பின் ஆக்சுவல் நோக்கம் என்ன, நோக்கம் நிறைவேறியதா, என்பது போன்ற கேள்விகளுக்கு இன்றுவரை பதில் கிடையாது. அமெரிக்க டீலிங்களுடன் பரிச்சயம் இருந்தால், ஓரளவுக்கு ஊகிக்கலாம்.
எமது ஊகம் என்ன? இந்த ஹக்கானி குழுவின் தாக்குதல்கள் அமெரிக்க ராணுவத்துக்கு ஆப்கானிஸ்தானில் தேவையில்லாத சங்கடங்களைக் கொடுக்கின்றன. அமெரிக்கா தனது ராணுவத்தை அடுத்த வருடம் ஆப்கானில் இருந்து திருப்பி அழைத்துக் கொள்ள விரும்புகிறது. அதுவரை, இந்த தாக்குதல்களை ஹக்கானி குழு நிறுத்திக் கொண்டால் அமெரிக்காவுக்கு பெரிய உதவியாக இருக்கும்.
இதற்கு ஹக்கானி குழு ஏன் சம்மதிக்க வேண்டும்? தாக்குதலை நிறுத்துவதால், அவர்களுக்கு என்ன ஆதாயம்?
சில விஷயங்களில் அவர்களுக்கு அமெரிக்காவின் தயவு தேவை. முக்கியமாக, இந்தக் குழு தொடர்ந்தும் வெளிநாடுகளில் இயங்குவதற்கு அமெரிக்காதான் ‘தேவையற்ற தலையீடு செய்யாமல்’ இருக்க வேண்டும். ‘தேவையற்ற தலையீடு’ என்பது, ஹக்கானி குழுவை, வெளிநாடுகள் பயங்கரவாத அமைப்பாக கிளாஸிஃபை பண்ணி, தடை செய்வது!
கிட்டத்தட்ட விடுதலைப் புலிகள் அமைப்புக்கு சில வருடங்களுக்குமுன் சர்வதேச அரசியலில் ஏற்பட்ட அதே நிலைமை, தற்போது ஹக்கானி குழுவுக்கு ஏற்பட்டுள்ளது. இவர்கள் சரியான முடிவை எடுக்காவிட்டால், அவர்களுக்கு ஏற்பட்ட கதியே ஏற்படும்.
அது எப்படி?
அல்-காய்தா, மற்றும் தலிபான தீவிரவாத இயக்கங்கள் உலக நாடுகள் பலவற்றில், பயங்கரவாத அமைப்புகளாக தடை செய்யப்பட்டுள்ளன. கூட்டு அமைப்புகளான ஐரோப்பிய ஒன்றியம், ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் ஆகியவையும், அங்கத்துவ நாடுகளின் வாக்களிப்பின் மூலம், அல்-காய்தா, தலிபான் ஆகியவற்றை பயங்கரவாத அமைப்புகளாக பிரகடனம் செய்துள்ளன.
ஆனால், இந்த இரு தீவிரவாத இயக்கங்களின் ‘சைட்-கிக்’காக அயங்கிவந்த ஹக்கானி குழு, இன்னமும் பயங்கரவாத அமைப்பாக பிரகடனம் செய்யப்படவில்லை.
நீங்கள் இப்படி நினைக்கலாம் – “வெளிநாடுகள் ஒன்றுசேர்ந்து ஒரு இயக்கத்தை பயங்கரவாத அமைப்பாக பிரகடனம் செய்வதால், பெரிதாக என்ன அபாயம் வந்துவிடப் போகின்றது? பாகிஸ்தானில் இருந்துகொண்டு, ஆப்கானுக்குள் தாக்குதல் நடாத்தும் ஹக்கானி குழுவை, ஜெனீவாவில் பயங்கரவாத அமைப்பாக பிரகடனம் செய்வதால், என்ன கெடுதல் வந்துவிடப் போகின்றது?”
புலிகள் இயக்கமும் அப்படித்தான் நினைத்தது.
அப்படி இல்லை என்று, சில ஆதரவாளர்கள் விஷயம் புரியாமல் மறுப்பார்கள். அது அவர்களுடைய உரிமை. உலக அளவில் பயங்கரவாத அமைப்பாக பிரகடனம் செய்யப்படுவது எவ்வளவு பாதகமானது என்பதற்கு மிகச் சரியான, சமீபகால உதாரணமே, விடுதலைப்புலிகள் இயக்கம்தான்.
பயங்கரவாத அமைப்பு என்ற சர்வதேச தடை, வெளிநாடுகளிலுள்ள சொத்துக்களை முடிக்கிவிடும், செயற்பாட்டாளர்களை கைது செய்ய வைத்துவிடும் என்பதெல்லாம் மைனர் மேட்டர்கள்.
பெரிய மேட்டர் என்ன? தடை செய்யப்பட்ட அமைப்புக்கு எதிராக உலக நாடுகள் அனைத்தும் திரும்பும் என்பதும், குறிப்பிட்ட இயக்கத்தை அழிப்பதற்கு செய்யப்படும் எந்த உதவிக்கும், சர்வதேச அரசியல் ரீதியான எதிர்ப்புகள் இருக்காது என்பதுதான்!
எமது ஊகம் சரியாக இருக்குமானால், பெயர் குறிப்பிடாத அரபு நாடு ஒன்றில் நடைபெற்ற சந்திப்பின்போது, இதைத்தான் அமெரிக்கா, ஹக்கானி குழுவின் பிரதிநிதிகள் இருவரிடமும் சொல்லி எச்சரித்திருக்கும். “ஆப்கானில் தேவையற்ற வேலைகள் செய்வதை நிறுத்துங்கள். நாங்கள் அடுத்த ஆண்டு அங்கிருந்து அகன்றபின், என்ன வேண்டுமோ, செய்து கொள்ளுங்கள். அது உங்கள் இஷ்டம்”
முன்பு விடுதலைப்புலிகள் அமைப்புக்கு, “தற்கொலைத் தாக்குதல்கள் செய்வதை மட்டுமாவது உடனே நிறுத்துங்கள்” என்று ரகசிய சந்திப்பு ஒன்றில் வைத்து கூறப்பட்டது.
ஆனால், அதற்குப் பின்னர்தான், கொழும்பு கோட்டை ரயில்வே நிலையத்தில் நடாத்தப்பட்ட தற்கொலைத் தாக்குதல், முன்னாள் ராணுவத் தளபதி சரத் பொன்சேகா, இன்னாள் பாதுகாப்பு செயலர் கோட்டாபய ராஜபக்ஷே ஆகியோர் மீதான் தாக்குதல் முயற்சிகள் ஆகியவை நடாத்தப்பட்டன.
இப்போது ஹக்கானி குழுவிடம், கிட்டத்தட்ட அப்படியொரு அறிவுறுத்தல்தான் கூறப்பட்டிருக்கும் என்பது எமது ஊகம்.
ஹக்கானி குழு, அமெரிக்க அலர்ட்டில் பொதிந்துள்ள பயங்கரத்தைப் புரிந்து கொள்வார்களா? தமது நடவடிக்கைகளை மாற்றிக் கொள்வார்களா? அது அவர்களது சர்வதேச ராஜதந்திர அறிவைப் பொறுத்த விஷயம். அவர்களது தலைமை எடுக்க வேண்டிய முடிவு அது.
அவர்களது எதிர்காலம், அவர்களது உயிர்கள், அவர்களது முடிவு.
விடுதலைப்புலிகள் அமைப்பில் முடிவுகள் அனைத்தும் யாரால் எடுக்கப்பட்டன என்பது பெரிய ரகசியமல்ல. ஹக்கானி குழுவின் முடிவுகள் ஒரு குடும்பத்தாலேயே எடுக்கப்படுகின்றன. (இங்கும் பொதுக்குழு, செயற்குழு என்றெல்லாம் அலங்காரக் குழுக்கள் உள்ளன.)
ஹக்கானி குழுவின் பிரதான தலைமை, மௌலவி ஜலாதுதீன் ஹக்கானி, அவரது மகன் சிராஜூதீன் ஹக்கானி ஆகியோர்தான். சிராஜூதீனின் மற்றொரு சகோதரர் பதாருதீன் ஹக்கானி, தலைமை மட்டத்தில் உள்ள மற்றொருவர். இவர்கள் தமது சர்வதேச ராஜதந்திர அறிவுக்கு உகந்த விதத்தில் எடுக்கும் முடிவு, இவர்களது இயக்கத்தின் வருங்காலத்தை நிர்ணயிக்கப் போகின்றது!

நன்றி:விரிவிறுப்பு

0 comments:

Post a Comment