Sunday, August 29, 2010

பாப்ரி மஸ்ஜித் இடிக்கப்படும் என்ற தகவல் ஏற்கனவே கிடைத்திருந்தது

ராய்பரேலி:1992 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 6 ஆம் தேதி பாப்ரி மஸ்ஜித் தகர்க்கப்பட வாய்ப்புள்ளது என்ற தகவல் ஃபைஸாபாத் போலீஸிற்கு முன்னரே கிடைத்தது என அத்வானியின் முன்னாள் பாதுகாவலரும், ஐ.பி.எஸ் அதிகாரியுமான அஞ்சு குப்தா சிறப்பு நீதிமன்றத்தில் வாக்குமூலம் அளித்துள்ளார்.சீஃப் ஜுடிசியல் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் எதிர்தரப்பின் குறுக்கு விசாரணையின் போது அஞ்சு குப்தா இதனை தெரிவித்தார்.

டிசம்பர் 5 ஆம் தேதி ஃபைஸாபாத் போலீஸ் ஐ.ஜி.எ.கே.ஸரன் கூட்டிய கூட்டத்தில் தான் பங்கெடுத்திருந்ததாகவும் அஞ்சு தெரிவித்தார். 45 நிமிடம் நீண்ட அக்கூட்டத்தில் பாப்ரி மஸ்ஜிதிற்கு இரண்டு விதமான அச்சுறுத்தல் இருப்பதாக உளவுத்துறையின் தகவல்களை மேற்க்கோள்காட்டி ஸரன் கூறியதாக அஞ்சு குப்தா தெரிவித்தார்.அயோத்தியில் முகாமிட்டுள்ளவர்கள் தாக்குதல் நடத்த வாய்ப்புள்ளதாகவும், பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐ சட்ட ஒழுங்கை சீரழிக்க வாய்ப்புண்டு என்றும் உளவுத்துறை தகவல்கள் கிடைத்திருந்தன.

கரசேவகர்கள் மஸ்ஜிதை தகர்ப்பதற்கு சில நிமிடங்களுக்கு முன்பு அத்வானி அயோத்தியாவில் உணர்ச்சியைத் தூண்டும் வகையில் பேசியதாக அஞ்சு குப்தா ஏற்கனவே வாக்குமூலம் அளித்திருந்தார். பாப்ரி மஸ்ஜித் இருக்குமிடத்தில் ராமர் கோயிலை கட்டுவோம் என்றும் அத்வானி பேசினார் என்றும் அஞ்சு குப்தா தெரிவித்திருந்தார்.

அத்வானி, முரளி மனோகர் ஜோஷி உள்ளிட்டோர் குற்றவாளிகளான இவ்வழக்கில் அரசு தரப்பு சாட்சிதான் அஞ்சு குப்தா. சன்னியாசினி சாத்வி ரிதாம்பரா, வினய் கத்தியார் உள்ளிட்ட சங்க்பரிவார தலைவர்களும் உணர்ச்சியைத் தூண்டும் வகையில் பேசியதாக அஞ்சுகுப்தா வாக்குமூலம் அளித்திருந்தார்.ரகசிய புலனாய்வு ஏஜன்சியான ரிசர்ச் அண்ட் அனாலிசிஸ் பிரிவில் அதிகாரியாக தற்பொழுது அஞ்சு குப்தா பணியாற்றி வருகிறார்.
செய்தி:நன்றி தேஜஸ் மலையாள நாளிதழ்

0 comments:

Post a Comment