Wednesday, February 2, 2011

எகிப்தின் போராட்டத்திற்கு துருக்கி, ஈரான் ஆதரவு, இஸ்ரேல் கவலை

எகிப்தின் மண்ணில் புயலாக வீசும் மக்கள் திரள் போராட்டத்தினால் முப்பது ஆண்டுகளாக சர்வாதிகார ஆட்சி நடத்திவந்த ஹுஸ்னி முபாரம் மேலும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.

முபாரக்கை ஆட்சியை விட்டு அகற்றியே தீருவோம் என்ற உறுதியுடன் தஹ்ரீர் சதுக்கத்தில் பெருந்திரளாக கூடியிருக்கும் லட்சக்கணக்கான எகிப்திய மக்களுக்கு துருக்கியும், ஈரானும் ஆதரவளித்துள்ளன.

எகிப்து நாட்டில் சர்வாதிகாரி ஹுஸ்னி முபாரக்கிற்கு எதிரான மக்கள் போராட்டம் துவங்கி ஒருவாரம் கழிந்தபிறகும் மெளனம் சாதித்து வந்த துருக்கி பிரதமர் ரஜன் தய்யிப் உருதுகான் தற்போது எகிப்திய மக்களுக்கு தனது பரிபூரண ஆதரவை தெரிவித்துள்ளார்.

நாட்டின் ஸ்திரத்தன்மையும், பாதுகாப்பும் நிலைப்பெற வேண்டுமானால் மக்களின் குரலுக்கு மதிப்பளிக்க வேண்டுமென பாராளுமன்றத்தில் நடத்திய உரையில் அவர் தெரிவித்தார்.

எகிப்திற்கு நன்மையை ஏற்படுத்தும் காரியங்களை செய்யுங்கள். மக்களை திருப்தி படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுங்கள் என முபாரக்கிடம் உருதுகான் தெரிவித்துள்ளார்.

எகிப்து சுமூகமான சூழலுக்கு மாறினால் தான் கெய்ரோவுக்குச் செல்லப்போவதாக அவர் அறிவித்துள்ளார். அதேவேளையில், போராட்டம் அமைதியான வழியில் நடத்த வேண்டுமெனவும், நாட்டின் கலாச்சாரத்தையும், பாரம்பரியத்தை பாதுகாக்க வேண்டுமெனவும் அவர் எகிப்து நாட்டு மக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

எகிப்திலும், துருக்கியிலும் விரைவில் சீர்திருத்தம் வரவேண்டுமென நாங்கள் விரும்புகிறோம். அத்துடன் அமைதியும், பாதுகாப்பும் தேவை. ஜனநாயக்த்திற்கான போராட்டங்களுக்கு துருக்கி என்றுமே ஆதரிக்கும் என உருதுகான் அறிவித்தார்.

எகிப்தில் சர்வாதிகார ஆட்சிக்கு எதிராக போராடிவரும் மக்களுக்கு ஈரானும் தனது பரிபூரண ஆதரவை தெரிவித்துள்ளது. உலகில் சுதந்திரத்திற்காக போராடக் கூடியவர்களுடன் நாங்கள் இருப்போம். மகத்தான நாடான எகிப்தில் புரட்சிக்கு நாங்கள் எங்களுடைய ஆதரவை பிரகடனப்படுத்துகிறோம் என ஈரானின் வெளியுறவுத்துறை அமைச்சர் அலி அக்பர் ஸாலிஹி தெரிவித்துள்ளார்.

எகிப்தின் புரட்சி இஸ்லாமிய மேற்காசியா உருவாக உதவும் என நம்புவதாக ஈரான் தெரிவித்தது. அதேவேளையில் அரபுலகத்தை அதிரவைத்துள்ள போராட்டத்தில் அமெரிக்கா தலையிடுவதாக ஸாலிஹி குற்றஞ்சாட்டினார்.

பிராந்தியத்தில் மாற்றம் தேவை. மக்கள் ஆதரவு இல்லாத ஆட்சி கவிழவேண்டும். மேற்கத்திய சக்திகளின் கட்டுப்பாட்டிலுள்ள அரசுகள் கவிழ்வதற்கான நேரம் வந்துவிட்டது என்பதை நிரூபிக்கின்றனர் துனீசியா மற்றும் எகிப்து நாட்டு மக்கள் என ஸாலிஹி தெரிவித்துள்ளார்.

அதேவேளையில் எகிப்தில் ஈரானில் ஏற்பட்ட புரட்சிபோல நிகழ்ந்துவிடுமோ என்ற கவலையில் இஸ்ரேல் உள்ளது. அராஜகங்கள் நிறைந்த சூழலில் ஒரு கட்டமைக்கப்பட்ட இஸ்லாமிய சக்திக்கு நாட்டின் கட்டுப்பாட்டை தங்கள் வசம் கொண்டுவர இயலும். ஈரானில் அதுதான் நடந்தது. மற்ற சில இடங்களிலும் அதுதான் சம்பவித்தது என நேற்று முன்தினம் ஜெர்மனி சான்ஸ்லர் ஆஞ்சலா மெர்க்கலுடன் நடத்திய பத்திரிகையாளர்கள் சந்திப்பில் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்தார்.

தங்களின் உற்றத் தோழனான முபாரக் தனிமைப்படுத்தப்படுவதை இஸ்ரேல் கவலையுடன் பார்க்கிறது.முபாரக்கிற்கு எதிரான நிலைப்பாட்டை எடுக்காதீர்கள் என இஸ்ரேல் அமெரிக்காவுடனும், மேற்கத்திய நாடுகளிடமும் வேண்டுகோள் விடுத்துள்ளது. இதற்கு அழுத்தம் கொடுக்க பல்வேறு நாடுகளில் செயல்படும் தங்களது தூதரக பிரதிநிதிகளுக்கு உத்தரவிட்டுள்ளது இஸ்ரேல்.

செய்தி:தேஜஸ்

1 comments:

  1. வணக்கம் உறவே உங்கள் வலைத்தளத்தினை இங்கேயும் இணையுங்கள்....

    http://meenakam.com/topsites


    http://meenagam.org

    ReplyDelete